தமிழ்நாடு, தமிழ்நாடு மாவட்டங்களின் வரலாறு இதோ..!!
தமிழ்நாட்டில் தற்போது மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்பாக நடைமுறையில் இருந்த மாவட்டங்கள் 13 தான். 1960களில் சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, சேலம், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் இருந்தன.
1966-ல் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரியை பிரித்ததே வரலாற்றின் முதல் மாவட்ட பிரிவாகப் பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய வட்டங்கள் உள்ளடக்கிய பகுதி தருமபுரி மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். மேலும் 1963ல் பதவியேற்ற இவர் 1967 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடைசி முதலமைச்சராக இருந்தவர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலகட்டத்தில், அதாவது 1974-ல் திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ள கோயம்புத்தூர் பகுதியிலிருந்து 1979-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டது. தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்தார். இதை தொடர்ந்தது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 1985ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் முக்கிய தொழில்களாக இரும்புப் பெட்டி, பூட்டு, விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் ஆகியவை உள்ளன. இந்த மாவட்ட விரிவாக்கம் திண்டுக்கல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழ்நாட்டின் பழம்பெரும் மாவட்டமாக உள்ள திருநெல்வேலி மாவட்டம், 1780 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1986ல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் இந்த மாவட்டம் முதன் முதலாகப் பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் என்பது அந்த காலகட்டத்தில் 15 வட்டங்களை உள்ளடக்கியதாக இருந்துள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைக் கருத்தில் கொண்டே இந்த மாவட்ட பிரிவு மேற்கொள்ளப்பட்டது.
1989ல் வட ஆற்காட்டிலிருந்து பிரிக்கப்பட்ட திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் 1997ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் திருவண்ணாமலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 1989ம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டமாக திகழும் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
1991ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களும்,1993ம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் 1995ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றில் பெரும்பங்காற்றிய காலம் என்றால் அது 1985 -1995க்கு இடைப்பட்ட காலம் தான். 1996-ல் மதுரை மாவட்டத்தை பிரித்து தேனி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. 1996 காலகட்டத்திற்கு முன்பு தேனி மாவட்டம், வீரன் அழகுமுத்து கோன் மாவட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜாதி கலவரங்கள், வன்முறைகள் ஏதும் நிகழக்கூடாது என கருதி, அப்போதைய திமுக ஆட்சியில், தேனி மாவட்டம் என பெயரிடப்பட்டது. 1997ம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு நாமக்கல் என்ற புது மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு முதலில் பிரிந்த மாவட்டமான தருமபுரியில் இருந்து 2004-ல் கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது. 1995ல் திருச்சியிலிருந்து பிரிந்த மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007ம் ஆண்டில் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009ல் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம், கடந்த 2009 பிப்ரவரி 22-ம் தேதி, அப்போதையை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.
2019ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், புதிதாக 5 மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. நெல்லையிலிருந்து தென்காசி மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து கடைசியாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.