தமிழகத்தின் -17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
”மகாராஷ்டிரா முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதி வரை நிலவும் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரையிலான வளிமண்டலச் சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இந்த செய்தியையும் படிங்க….
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றில் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (சென்டி மீட்டரில்)
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பென்னாகரம் (தருமபுரி), தருமபுரி பிடிஓ தலா 6 சென்டி மீட்டர், ராசிபுரம் (நாமக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 5 சென்டி மீட்டர், நடுவட்டம் (நீலகிரி), எருமைப்பட்டி (நாமக்கல்) தலா 4 சென்டி மீட்டர்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.