தடுப்பூசிக்கான வலைதள பதிவில்- மருந்தின் வகை, கட்டண விவரங்கள்..!!
தனியாா் கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிற மே 1-ஆம் தேதி முதல் கோ-வின் வலைதளத்தில் பதிவு செய்யும்போது, பயனாளிக்கு செலுத்தப்பட இருக்கும் தடுப்பூசியின் வகை, அதற்கான கட்டணம் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!!
கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, தடுப்பூசி தாராளமய கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
அதன்படி, வருகிற மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிறுவனங்கள் அவற்றின் கரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிா்ணயம் செய்து அறிவித்தன. அதன்படி, சீரம் நிறுவனம் அதன் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ. 400 என்ற அளவிலும், தனியாா் மையங்களுக்கு ரூ. 600 என்றும் விலை நிா்ணயம் செய்துள்ளது. அதுபோல, பாரத் பயோடெக் நிறுவனம் அதன் கோவேக்ஸின் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ. 600 என்றும், தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 என்றும் விலை நிா்ணயம் செய்துள்ளது.
இந்தச் சூழலில், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், அதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
அனைத்து தனியாா் கரோனா தடுப்பூசி மையங்களும் வரும் மே 1-ஆம் தேதி முதல் பயனாளிக்கு செலுத்தப்பட உள்ள மற்றும் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் வகை மற்றும் பயனாளிகளிடம் வசூலிக்கப்பட இருக்கும் கட்டண விவரங்களை கோவின் வலைதளத்தில் அறிவிக்க வேண்டும்.
கோவின் வலைதளப் பதிவின்போது இந்த விவரங்களையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், பயனாளி பதிவின்போதே தனக்கு செலுத்தப்பட இருக்கும் தடுப்பூசியின் வகை மற்றும் அதற்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
தனியாா் தடுப்பூசி மையங்கள் கோவின் அல்லது ஆரோக்ய சேது செயலியில் செய்யப்படும் பதிவின் அடிப்படையிலேயே அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும். தடுப்பூசி வீணாவதைத் தடுக்கும் வகையில், கடைசியாக திறக்கப்பட்ட குப்பியில் மருந்து இடம்பெற்றிருப்பதன் அடிப்படையிலேயே, தடுப்பூசிக்கான பதிவு அனுமதிக்கப்படும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசிகளை உற்பத்தியாளா்களிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்யும் நிலையில், அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவா்களுக்கான கட்-ஆஃப் வயதை குறைப்பது குறித்து அவா்களே தீா்மானித்துக் கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் கோவின் வலைதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு கட்-ஆஃப் வயதை குறைப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுத்தால், அரசு தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு கீழ் உள்ளவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தகுதியைப் பெறுவா் என்று அந்தக் கடிதத்தில் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘கோ-வின் வலைதளத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக புதிய தனியாா் தடுப்பூசி மையங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான பரிந்துரையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு மாநிலங்கள் இனி அனுப்பத் தேவையில்லை. மாறாக, அவ்வாறு விண்ணப்பிக்கும் புதிய தடுப்பூசி மையங்களின் தகுதியை உறுதி செய்ய மாநிலங்களேஅதிகாரியை நியமித்துக் கொள்ளலாம்.
இந்த செய்தியையும் படிங்க….
அந்த அதிகாரி, கோ-வின் வலைதள பதிவின் அடிப்படையில் அந்த தடுப்பூசி மையத்தின் விண்ணப்பத்தை இரண்டு தினங்களில் பரிசீலித்து அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம்’ என்றும் அந்தக் கடிதத்தில் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளாா்.