நடப்பாண்டு நீட் தேர்வு நடத்த முடிவு
‘MBBS., மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நடப்பு ஆண்டு, ‘நீட்’ தேர்வை, ‘ஆன்லைன்’ வாயிலாக நடத்தும் திட்டம் இல்லை. வரும், ஜூன் – ஜூலையில், வினாத்தாளில் கையால் எழுதும் வழக்கமான டைமுறையிலேயே, தேர்வு நடத்தப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு
ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு, ஜே.இ.இ., எனப்படும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதில் தேர்ச்சி பெற தவறும் மாணவர்கள் ஓர் ஆண்டை வீணாக்க கூடாது என்ற நோக்கத்தில், ஆண்டுக்கு நான்கு முறை இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதை, விடைத்தாளில் கையால் எழுதும் வழக்கமான முறையிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ மாணவர்கள் எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம், 28 சதவீதம் அதிகரித்தது
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட, ஜே.இ.இ., தேர்வை, இரண்டாம் வாய்ப்பில் எழுதியவர்களின் தேர்ச்சி விகிதம், 28 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், ‘எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வையும், ஆண்டுதோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்த வேண்டும்; ஆன்லைன் வாயிலாகவும் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்’ என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே, கூறியதாவது:
மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே, கூறியதாவது:நீட் தேர்வை ஆண்டு தோறும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடத்த வேண்டும் என்று தான், மத்திய அரசும் கருதுகிறது. ஒருமுறை குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர், ஆண்டை தவறவிடாமல், அடுத்த வாய்ப்பில் அதிக மதிப்பெண் எடுக்க இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.ஆனால், ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தினால் மட்டுமே, இது சாத்தியம்.
நீட் தேர்வை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள்
கையால் எழுதும் வழக்கமான நடைமுறையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, நீட் தேர்வை நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சில குறிப்பிட்ட கல்லுாரியில் பொறியியல் படிப்பில் சேருவதற்காக மட்டுமே, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால், நாடு முழுதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்.
எனவே, உயிரியல் படிக்கும் ஒரு மாணவன், கணினியில் தேர்வு எழுதுவதை சிரமமாக நினைக்க கூடும். அதற்காக, அவர் தனியாக பயிற்சி எடுக்க நேரிடலாம்.எனவே, ஆண்டுதோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வை நடத்துவது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டி உள்ளது. எனவே தான், எந்த புதிய மாற்றத்துக்கும், ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை, அரசு அவகாசம் கோருகிறது
ஜூன் – ஜூலை மாதங்களில், வழக்கமான நடைமுறையில் மட்டுமே நடத்தப்படும்
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுகள், ஜூன் – ஜூலை மாதங்களில், வழக்கமான நடைமுறையில் மட்டுமே நடத்தப்படும். குறைந்த அவகாசத்தில் மாற்றங்களை அறிவிப்பதோ, தேர்வு தேதியை தள்ளி வைப்பதோ நியாயமாக இருக்காது; அது, இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளான, எம்.டி., எம்.எஸ்., பி.ஜி., டிப்ளமோ சேர்க்கைக்கான, ‘நீட்’ தேர்வுகளை, என்.பி.இ., எனப்படும், தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு, அடுத்த மாதம், 18ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை, வரும், 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இவ்வாண்டுக்கான தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுக் கட்டணம்-உயர்த்தப்பட்டுள்ளது
எந்தெந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பது கூட, இன்னும் முடிவாகாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாக றப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம், 3,750 ரூபாயில் இருந்து, இந்த ஆண்டு, 5,015 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவினருக்கு, 2,750 ரூபாயில் இருந்து, 3,835 ரூபாயாக தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்
தேர்வு மையங்கள், 165ல் இருந்து, 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.மதியம், 3:30 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடத்தப்பட்டு வந்த தேர்வுகள், இம்முறை, மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தேர்வர்கள் ஒரே மதிப்பெண் பெற்றால், அவர்களில் தகுதியான தேர்வரை தேர்வு செய்யும் நடைமுறையிலும், இம்முறை, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.