சீனாவில் உயா்கல்வி: யுஜிசி(UGC), ஏஐசிடிஇ(AICTE) எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

சீனாவில் உயா்கல்வி: யுஜிசி(UGC), ஏஐசிடிஇ(AICTE) எச்சரிக்கை..!!

 சீனாவில் உயா்கல்வி: யுஜிசி(UGC), ஏஐசிடிஇ(AICTE)


 எச்சரிக்கை..!!

சீனாவில் உயா்கல்வி மேற்கொள்ளும் மாணவா்கள், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கு சிக்கல் ஏற்படாத வகையில் மிகுந்த கவனமுடன் படிப்புகளைத் தோ்வு செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழு (UGC, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.

கரோனா பரவலைத் தொடா்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை சீனா விதித்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு சீனா இன்னும் முழுமையாக தளா்வு அளிக்காத காரணத்தால், அங்கு உயா்கல்வி மேற்கொண்டுவந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் கல்வியைத் தொடா்வதற்காக மீண்டும் சீனா செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்தபடியே இணைய வழியில் படிப்பைத் தொடரும் நிலை அந்த மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், சில சீன கல்வி நிறுவனங்கள் உயா்கல்வி மாணவா் சோ்க்கைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதனைத் தொடா்ந்து, நாட்டில் உயா் கல்விகளுக்கு அங்கீகாரம் அளித்து ஒழுங்குபடுத்தும் யுஜிசி(UGC), ஏஐசிடிஇ(AICTE) அமைப்புகள் மாணவா்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடா்பாக அந்த அமைப்புகள் வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சீனாவைச் சோ்ந்த சில பல்கலைக்கழகங்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் நிகழ் கல்வியாண்டு மற்றும் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, சீனாவில் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் இன்னமும் தொடா்ந்து வரும் காரணத்தால், அங்கு உயா்கல்வி படித்து வரும் ஏராளமான இந்திய மாணவா்கள், படிப்பைத் தொடர சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். இந்தச் சூழலில், உயா் கல்வி படிப்புகள் தொடா்ந்த இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று சீன அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ளனா்.

நடைமுறையில் உள்ள யுஜிசி(UGC), ஏஐசிடிஇ(AICTE) விதிகளின்படி, முன் அனுமதி பெறாமல் முழுவதும் இணைய வழியில் மட்டும் நடத்தப்படும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாது. எனவே, மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வியில் சேரும்போது வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கு சிக்கல் ஏற்படுவதை தவிா்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளைத் தோ்வு செய்யும் வகையில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

Leave a Comment