கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!! - Tamil Crowd (Health Care)

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!!

 கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!!

நாடு முழுவதும் ஓயாத சர்ச்சையாகியுள்ள நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது? என்பது தொடர்பாக டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதால் தலைவலி, காய்ச்சல் உள்பட பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கோவிஷீல்டை காட்டிலும் கோவாக்சின் தடுப்பூசி தான் சிறந்தது என்று ஒரு பேச்சு மருத்து தெளிவு இல்லாத மக்களிடையே வாய்மொழி விவாத பொருளாக மாறிவிட்டது. 

அதே சமயம், மற்றொரு தரப்பு மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அந்த தடுப்பூசி தான் சிறந்தது என்று தங்களை அறியாமலேயே பிரசார பீரங்கியாக மாறி தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் ஓயாத சர்ச்சையாகியுள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது? என்பது தொடர்பாக டாக்டர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசு சாரா சேவை மருத்துவ சங்க மாநில செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது: 

இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி தான் மக்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பித்தனர். முன்கள பணியாளர்களுக்கு ஆரம்பத்தில் கோவாக்சின் போடப்பட்டது. 

கோவிஷீல்டு போல, காய்ச்சல், தலைவலி போன்றவை இல்லாததால், பொதுமக்களே தன்னெழுச்சியாக கோவாக்சின் போட்டனர். மூன்றாம் கட்ட பரிசோதனை அறிக்கை பிப்ரவரியில் தான் வந்தது. அதன்பிறகு தான் கோவிஷீல்டை காட்டிலும் கோவாக்சின் தடுப்பூசி இன்னும் நல்ல பலனை தருகிறது என்று பேசப்பட்டது. ஆய்வில் அது 80% பாதுகாப்பு வாய்ந்தது என்பது அறிவியல் பூர்வமாக தெரியவந்தது.

காய்ச்சல் வருவது ஏன்?

கோவிஷீல்டு, கோவாக்சின் உள்பட அனைத்து வகை நோய்களுக்கான தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டும்போது, லேசான காய்ச்சல், மூட்டு வலி வருவது இயல்பு. நாம் குழந்தைகளுக்கு முத்தடுப்பு அம்மை தடுப்பூசி, டிபி வராமல் இருக்க தடுப்பூசி போடுகிறோம். இந்த தடுப்பூசி போடும் போது லேசான காய்ச்சல் வரும். எனவே, தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்.

நோயை எதிர்க்க 45 நாட்கள் தேவை

தடுப்பூசி போட்டால் கொரோனா வருமா, வருதா என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டு அதன் பிறகு 8 வார இடைவெளியில் 2வது டோஸ் போடப்படுகிறது. அந்த டோஸ் பூஸ்டர் டோஸ் என்று கூறுகின்றனர். இந்த பூஸ்டர் டோஸ் போட்ட ஒன்றரை மாதத்துக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன்பிறகு தான் அந்த தடுப்பூசி 100 சதவீதம் வேலை செய்யும். நேற்று தடுப்பூசி போட்டார்கள். இன்று கொரோனா வந்து விட்டது. 

இதனால், தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று சொல்லக்கூடாது. நமது உடம்பில் எதிர்ப்பு சக்தி உண்டு பண்ண ஒன்றரை மாதம் ஆகும். அந்த ஒன்றரை மாதத்துக்கு பிறகு கொரோனா வர வாய்ப்புள்ளது. ஆனால், அந்த கொரோனா சாதாரண இருமல், தும்மல் மாதிரி 5 சதவீத பாதிப்புடன் போய் விடும். அங்கு தான் தடுப்பூசி வேலை இருக்கிறது. சாக வேண்டிய நிலையில் இருப்பதை சாதாரணமாக தலைவலி, தும்மல் போன்ற அளவுக்கு குறைத்து விடுகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் ராமலிங்கம்:

கோவிஷீல்டு-கோவாக்சின் தடுப்பூசி ஏறக்குறைய ஒன்று தான். 5 முதல் 10 சதவீதம் தான் வித்தியாசம்.  கோவிஷீல்டு 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை, இன்னொன்று கோவாக்சின் 70 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை பாதுகாக்கும் தன்மை உடையது. 100 பேருக்கு கோவிஷீல்டு போட்டால் 70 பேருக்கு தடுப்பூசி சக்தியின் மூலம் அவர்களை பாதுகாக்கும். கோவாக்சின் 100 பேரில் 75 பேர் வரை பாதுகாக்கும். தடுப்பூசியின் சக்தி இரண்டுக்கும் ஒன்று தான். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். இரண்டில் எது சிறந்தது என்கிற விவாதமே இப்போதைக்கு தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் கொரோனா பன்மடங்கு உக்கிர தாண்டவத்தை காட்டி கொண்டிருக்கிறது.

நடிகர் விவேக் விவகாரம்

கொரோனா தடுப்பூசி போட்டால் மாரடைப்பு வருவதாக சிலர் சொல்கின்றனர். இது மிகவும் தவறு.  நடிகர் விவேக் இறந்தது முழுக்க, முழுக்க மாரடைப்பு நோய் தான் காரணம். தடுப்பூசியின் சிறு உபாதைகளை பற்றி ேயாசிக்க வேண்டும். எல்லாவற்றிலும் சிறு பாதிப்பு இருக்க தான் செய்கிறது. பெரியம்மை, தட்டம்மை போன்ற எத்தனையோ அம்மைகளை தடுப்பூசி மூலம் வென்று விட்டோம். 

போலியோ எத்தனை குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்தது. நாம் சொட்டு மருந்து போட்டு போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறி விட்டது.  கொரோனா தடுப்பூசி போடுவது என்பது புதிய முயற்சி. மக்களுக்கு அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி தடுப்பூசி போட வைக்க வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். கொரோனா என்பது நம்முடன் எத்தனை வருடம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.  கொரோனாவால் 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நோய் முற்றிலுமாக அடங்கும்.  தடுப்பூசி என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம்.ஊசி போட்டவர்கள் 2 நாள் ஓய்வு எடுக்க வேண்டும்.

கோவிஷீல்டு 72% பாதுகாப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியில் இருக்கும் மூலக்கூறு மூலம் முட்டி வலி, காய்ச்சல், தலைவலி போன்ற சிறு பக்க  விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு ஊசிக்கும் 2வது ஊசிக்கும் அதிகபட்சம் 12  வார இடைவெளி தேவை. எத்தனை பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பு  தன்மை உள்ளது என்று பார்த்தால் 72 சதவீதம்  பாதுகாப்பு தன்மை இருப்பதாக  ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. உலக அளவில் நடந்த இந்த ஆய்வின் மூலம் நோய்  பாதுகாப்பு தன்மை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேக்சின் இலக்கு 80% எட்ட ஓராண்டு ஆகும்

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்  80 முதல் 90 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. 90 கோடி டோஸ்  நமக்கு வேண்டும். இப்போது 13 கோடி பேருக்கு தான் தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.  இவர்களுக்கு தடுப்பூசி போட குறைந்தது ஒரு வருட காலம் ஆகும்.  70 சதவீதம்  மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டால் நமக்கு வெற்றி தான். மீதமுள்ள 30 சதவீதம்  பேரை அதுவே பார்த்து கொள்ளும். இதை கவனத்தில் கொண்டு தான் இஸ்ரேல் நாடு 60  சதவீதம் பேருக்கு அவசர, அவசரமாக தடுப்பூசி போட்டுள்ளது.

அடினோ வைரசில் பிறந்த கோவிஷீல்டு

லண்டன்  ஆக்ஸ்போர்டு பல்கலை, ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கோவிஷீல்டு  தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. அதை, இந்தியாவில் சீரம் நிறுவனம்  தயாரித்து நம் நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.  சிம்பன்ஸி மனித குரங்கிடம் இருந்து சளி சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தும்  ‘அடினோ வைரஸ்’ மூலம் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை  இந்தியாவில் கோவிஷீல்டு என்கிறோம். மற்ற நாடுகளில் ஆஸ்ட்ரோஜெனிகா  என்கின்றார்கள். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்திய முதல்  தடுப்பூசி கோவிஷீல்டு என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாஸ்ட் பவுலிங்; ஸ்பின் பவுலிங்

கிரிக்கெட்டில்  எப்படி பந்துவீச்சில் பாஸ்ட் (வேகம்), ஸ்பின் (சுழற்பந்து) என்று  இருக்கிறது. அதேபோல தான் தடுப்பூசியிலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளில்  செயல்படுகிறது. ஆனால் நோக்கம் ஒன்று தான் கொரோனாவை தடுப்பது தான். அதாவது,  கோவாக்சின் வேறுமுறையில் வேலை செய்கிறது, கோவிஷில்டு வேறு முறையில் வேலை  செய்கிறது. எனவே, தேவையின்றி மக்கள் பீதியடைய வேண்டாம்.

2வது டோஸ் முக்கியம் ‘மக்களே’

நான் அந்த தடுப்பூசி  தான் போடுவேன், இந்த தடுப்பூசி போட மாட்டேன் என்று சொல்வதற்கு தற்போது நேரமில்லை. கோவிஷீல்டு,  கோவாக்சின் தடுப்பூசி முதல் முறை போடும் போது, அதனால் எந்த  புண்ணியமும் கிடையாது. இரண்டாவது முறை போடும் போது தான் 70 சதவீதம், 80  சதவீதம் பாதுகாப்பு இருக்கும். இரண்டாவது தடுப்பூசி கண்டிப்பாக போட  வேண்டும். அதனால் மக்களுக்கு இது தேவையில்லாத அச்சம்.

தடுப்பூசியால் ‘இறப்பு’ இல்லை

கோவிஷீல்டு,  கோவாக்சின் தடுப்பூசி போட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது  இந்தியாவில் கிடையவே கிடையாது. அதிகபட்ச பாதிப்பாக கை.கால் வலி, தலைசுற்றல், வாந்தி என்பது  போன்ற சிறு விளைவுகளை தான் ஏற்படுத்தியுள்ளது. உயிரை போக்கும் அளவுக்கு தடுப்பூசிகள் அபாயகரமானது இல்லை.

வேக்சினில் வித்தியாசமில்லை நாடு தான் வித்தியாசம்

கோவாக்சின் முழுக்க, முழுக்க  இந்தியாவில், இந்திய மக்களை வைத்து தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி  வெளிநாட்டில் உருவாக்கப்பட்டது. அதனால் உலகளவில் வெளிநாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் பரிசோதனை முறையில் போடப்பட்டது. அதில் கோவிஷீல்டும் பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment