கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

 கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து முன்வைக்கப்படும் சில முக்கியமான கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1. இந்தியாவில் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 அன்று தொடங்கியது. கீழ்காணும் பட்டியலில் இருப்பவர்கள் கொரோன தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்.

இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கும் அனைத்து சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 01 ஜனவரி 2022-ல் 60 வயதை அடைய இருப்பவர்கள்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 01 ஜனவரி 2022-க்குள் 45 வயதை அடைய இருப்பவர்கள், தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர்கள் குழு குறிப்பிட்டிருக்கும் இணை நோய் இருப்பவர்கள் இப்போது பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை வழிகாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

18 வயதை கடந்த அனைவரும் மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கியது. தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை கூடங்களிலோ உரிய கட்டணம் செலுத்தி தடுப்பூசியை பெறலாம். அந்தந்த மாநிலங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப அரசு அறிவித்துள்ள நிலையங்களிலும் தடுப்பூசி பெறலாம். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், அரசு பரிசோதனை நிலையங்களில் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கோவின் செயலி: கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது?

யார் வேண்டுமானாலும் கோவின் 2.0 வலைதளத்தின் மூலம் அல்லது ஆரோக்ய சேது மூலம் தடுப்பூசிக்காகத் தங்கள் அல்லது பிறரின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

3. இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் எவை?

மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக்-V ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 இந்தியாவில்  COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!  

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து கோவேக்சின் தயாரிக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி, கோவிஷீல்டு எனும் பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

4. கோவிட் -19 தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா?

தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் 50 சதவிகிதத்தை ஒன்றிய அரசுக்கும் 50 சதவிகிதத்தை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குகின்றன.

ஏப்ரல் 21ஆம் தேதி புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்கைப்படி புதிய விலையை சம்பந்தப்பட்ட தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்க இந்திய ஒன்றிய அரசு அனுமதித்தது.

எனினும், தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

5. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

அனைத்து தடுப்பூசிகளுக்குமே தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி ‘க்ளினிக்கல் ட்ரையல்’ செய்யப்பட்ட பின்னரே அனுமதி பெறுகின்றன. அந்த சோதனைகளில் இருந்து கிடைக்கக் கூடிய முடிவுகள் நல்ல முறையில் இருக்கின்றன.

எல்லா தடுப்பூசிகளுக்கும் பின்விளைவுகள் இருக்கும். வலி இருக்கலாம். ஊசி போட்ட இடத்தில் சிவப்பாகலாம். சிலருக்கு காய்ச்சல் வரலாம். சிலருக்கு களைப்பு ஏற்படும். இதுபோன்ற பின்விளைவுகள் எல்லா தடுப்புசிகளுக்கும் இருக்கும். அது போன்ற சிறு சிறு பக்கவிளைவுகள்தான் இந்த ஊசிகளுக்கும் ஏற்படும். பெரிய பாதிப்புகள் ஏற்படாது. எனவே தடுப்பூசிகள் பாதுகாப்பானவைதான்.

நீங்கள் கருவுற்றிருந்தாலும் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் கூறுகிறது.

குழந்தைகளுக்கும் சில நாடுகள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றன. அமெரிக்கா, 12 – 15 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதுமான பாதுகாப்பு தரவுகளை சேமித்து வைக்க உள்ளது அமெரிக்கா.

6. கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகள் என்ன?

தடுப்பூசியால் ஏற்படும் பாதகமான பக்க விளைவுகளைக் கண்டு அதிகம் பேர் தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உண்டாகும் பாதகமான விளைவுகள் (Adverse Effect Following Immunization -AEFI) என்னென்ன, அவை எந்த அளவுக்குக் கவலைக்குரியன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது இந்தச் சூழலில் முக்கியமாகிறது.

7. தடுப்பூசி போட்ட பின்னும் கொரோனா தாக்குவது ஏன்?

இரண்டு சுற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை தான். ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.

இதனால்தான் தடுப்பூசியின் வீரியம் (efficacy) குறித்த தரவு ஆய்வு செய்யப்படுகிறது, இது தடுப்பூசி எத்தனை சதவீதம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது. எந்தவொரு தடுப்பூசி உற்பத்தியாளரும் இதுவரை 100% செயல் திறன் இருப்பதாக தரவை முன்வைக்கவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின், 80 சதவிகித செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அதைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா ஏற்பட 20 சதவிகித வாய்ப்பு உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70% எனக் கூறப்படுகிறது. கோவிஷீல்டின் செயல்திறன் இரண்டு டோஸ்களின் இடைவெளியிலும் மாறுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் சற்று குறைவான செயல்திறனும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் செயல்திறன் அதிகமாகவும் உள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு, உங்களுக்குக் கொரோனாவின் தீவிரம் அதிகம் இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படாது. லேசான அல்லது அறிகுறி இல்லாத கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது.

8. இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகள் நான்கு வார இடைவெளியோடு வழங்கப்படுகிறது.

மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக, இந்தியா அனுமதி வழங்கிய ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில், மெல்லிய வேறுபாடு கொண்ட இரண்டு வகை தடுப்பூசி மருந்துகள் இரண்டு டோஸ்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் 21 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.

9. இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாமா?

சமீபத்தில் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பரவலாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன. ஸ்புட்னிக்-V இன்னும் அனைத்து இடங்களுக்கும் பரவலாக வந்து சேரவில்லை.

முதல் டோஸாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு அதே தடுப்பூசிகளே பெரும்பாலும் இரண்டாம் டோஸாகவும் வழங்கப்படுகிறது.

வெவ்வேறு தடுப்பு மருந்துகளை இரண்டு டோஸ்களாக எடுத்துக் கொள்ள தடை இல்லை என்றாலும், ஒரே மருந்தை எடுத்துக்கொண்டவர்களுக்கு மருந்தின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே மருந்து நிறுவனத்தின் இரு டோஸ்களை எடுத்துக்கொள்ளவே உலக சுகாதார அமைப்பும் பரிந்துரைக்கிறது.

Inactivated vaccine, mRNA vaccine என தடுப்பு மருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவியல் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதால் இரு டோஸ்களுக்கும் வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது உகந்ததல்ல என்றும் சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

10. இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை இரு இடங்களில் செலுத்திக்கொள்ளலாமா?

முதல் டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யும்போதே, அந்த மருத்துவமனை அல்லது மையத்திலேயே இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கும் உங்களது பெயர் அட்டவணைப்படுத்தப்படும்.

இந்த செய்தியையும் படிங்க…  

 வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா..?? 

ஆனால், இரண்டாம் டோஸ் பெறுவதற்கான நேரம் மற்றும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

11. கொரோனா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இது குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசி எடுத்துக்கொண்டபின் குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் உடலில் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் பரவலாகக் கூறுகின்றனர். எனினும், இறுதியான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

12. புதிய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசி வீரியத்துடன் செயல்படுமா?

கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால், ஆரம்பகால கொரோனா திரிபுகளுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளின் வீரியம் மரபணு மாற்றம் நிகழ்ந்த திரிபுகளுக்கு எதிரான வீரியம் சற்று குறைவாக இருக்கலாம் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

13. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னும் கோவிட்-19 தொற்று வருமா?

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட பின்னரும் சிலருக்கு கொரோனா தொற்று வருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி மற்றும் தென்படும். வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தல் அல்லது சில நாட்கள் மருத்துவ சிகிச்சையிலேயே குணமடையும்.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2-3 வாரங்களில் ஓரளவு கொரோனா எதிர்ப்பாற்றலை தடுப்பூசி உங்களுக்கு வழங்கும். இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்ட சில வாரங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தல், செயற்கை ஆக்சிஜன் தேவைப்டுதல் போன்ற நிலைகளுக்கு பாதிக்கப்பட்டவர் போகாமல் தடுக்கப்படும்.

ஒருவேளை தடுப்பூசி போடாமல் இருந்தால் ஆரம்பமே ஆபத்தாகும் நிலைகூட வரலாம். தொற்று மிதமான அளவில் மட்டுமே உண்டாகி குணமாக தடுப்பூசியே காரணம்.

14. கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படும்?

எந்தவொரு நோய்க்கும், வைரஸுக்கும் அல்லது தொற்றுக்கும் எதிராக போராட தடுப்பூசி உடலைத் தயார்படுத்துகிறது.

நோய்த்தொற்றுக்கு காரணமான கொரோனா வைரஸின் பலவீனமான அல்லது செயல்பாடற்ற பகுதிகளை கொண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை உடலின் ‘நோயெதிர்ப்பு மண்டலத்தை’ தொற்றுநோய்களை (ஆக்கிரமிப்பு வைரஸ்கள்) அடையாளம் காண ஊக்குவிப்பதுடன் உடலில் அவற்றிற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. இதன் மூலம், வெளிப்புறத்திலிருந்து வரும் வைரஸிற்கு எதிராக உடல் முன்கூட்டியே தயாராகிறது.

Leave a Comment