கொரோனா விதிமுறைகள்: தேர்தல் முடிவு தாமதமாகும் - சத்யபிரதா சாஹூ..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா விதிமுறைகள்: தேர்தல் முடிவு தாமதமாகும் – சத்யபிரதா சாஹூ..!!

 கொரோனா விதிமுறைகள்: தேர்தல் முடிவு தாமதமாகும் – சத்யபிரதா சாஹூ..!!

இதோ நெருங்கிவிட்டது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 கிளைமேக்ஸ். நாளை இந்நேரம் யார் அடுத்த முதல்வர் என்பது தெரிந்திருக்கும். எனினும், முடிவுகள் முழுமையாக அறிய கால தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குகள் நாளை (மே.2) எண்ணப்படுகின்றன. ‘இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று கட்சிகள் முடிவை நோக்கி ஆவலோடு காத்திருக்கின்றன.

குறிப்பாக திமுக. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை எப்படியும் வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமருவது மட்டுமல்ல, மல்லாக்க படுக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு, இன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டது. இனி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி.

எனினும், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.

கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும். தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகளில் 35,836 காவலர்கள் ஈடுபடவுள்ளனர்” என்றார்.

 தமிழக சட்டப்பேரவை தேர்தலின் முழுமையான முடிவுகள் அறிய இரவு வரை மக்கள் காத்திருக்க நேரிடலாம். மாலையிலேயே ஓரளவு பெரும்பான்மை தெரிந்துவிடும் என்பதால், ஆட்சியமைக்க போவது யார் என்று எளிதில் கெஸ் செய்துவிடலாம். ஆனால், முழுமையான அதிகாரப்பூர்வ முடிவுக்கு நள்ளிரவு வரை காத்திருக்க நேரிடும்.

Leave a Comment