கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது- தமிழக அரசு.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் நாள்தோறும் கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு உடனிருப்பவர்கள் கண்டறியப்பட்டு, தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பது, இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை முழுமையாக மீண்டும் செயல்பட வைப்பது, ஏப்ரல் 1 முதல் 45 வயதிலிருந்த 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
நோயின் பரவல் தன்மையை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.