கொரோனா தொற்று ஒரு தொடக்கம்தானா... இயற்கையின் விதிகள் நமக்குச் சொல்வது என்ன? - Tamil Crowd (Health Care)

கொரோனா தொற்று ஒரு தொடக்கம்தானா… இயற்கையின் விதிகள் நமக்குச் சொல்வது என்ன?

 கொரோனா தொற்று ஒரு தொடக்கம்தானா… இயற்கையின் விதிகள் நமக்குச் சொல்வது என்ன?

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஒரு தொடக்கம் மட்டுமே. இதுநாள் வரை ஆங்காங்கே இருந்த தொற்றுநோய் பிரச்னைகள் இப்போது உலகம் முழுக்கச் சேதங்களை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. நாம் இப்போதே சுதாரித்துக்கொள்ளாவிடில், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகும் என்று உலகளவில் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பூமி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அந்த வரிசையில் மனித ஆதிக்கம் நிறைந்த இந்த நவீன யுகத்தில் நாம் அதன்மீது பதித்துள்ள அடையாளம் என்றும் அழியாதது. ஆனால், அந்த அடையாளம் எந்தக் கோணத்திலுமே நல்ல விதமாகச் சொல்லக்கூடியதல்ல.

இந்த செய்தியையும் படிங்க…

 அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா-உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! | 

விவசாயம், காடழிப்பு, தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், வாழ்விட அழிப்பு என்று மனித இனத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் பூமியை நிறையவே மாற்றிவிட்டது. அதன்மீது வாழ்ந்த லட்சக்கணக்கான உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டது. பூமியின் காலநிலை சமநிலையைச் சிதைத்துவிட்டது. இந்த விளைவுகள் அத்தனைக்குமே முழுமுதற் காரணம் மனிதர்களே என்பது மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்லப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 5% மட்டுமே மனிதர்கள் ஆக்கிரமித்திருந்தனர். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 50% நிலப்பகுதியை மனித இனம் ஆக்கிரமித்துள்ளது.

இதற்காக, காட்டுயிர்களின் வாழ்விடங்கள் பலவும் அழிக்கப்பட்டன. பல காட்டுயிர்களும் அந்தச் செயல்முறையில் அழிந்துபோயின. மனிதர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கும் நடுவிலான இடைவெளி சுருங்கத் தொடங்கியது. இரண்டு தரப்புக்குமான தொடர்பு அதிகரித்தது. இது, கொசுக்கள் முதல் பாலூட்டிகள் வரை பல்வேறு உயிரினங்களிடம் இருந்து பல நோய்களை மனிதர்களிடையே கொண்டுவந்தது.

டார்வினுடைய இயற்கைத் தேர்வு கோட்பாட்டின்படி, ஒரு நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு அந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ற உடலமைப்பு, திறன் மற்றும் எதிர்ப்பாற்றல் இருக்கும். அதன்படி, காடுகளில் வாழும் உயிரினங்களுக்கு அந்த நிலவியலில் இருக்கின்ற அபாயங்களைச் சமாளிப்பதற்கான திறன், உடலமைப்பு மற்றும் எதிர்ப்பாற்றல் இருக்கும். அதேபோலத்தான், நகரம், ஊர் போன்ற தனிக் குடியிருப்புகளை உருவாக்கி காடுகளிடமிருந்து விலகி தனித்து வாழத் தொடங்கிவிட்ட மனித இனத்துக்கும் அவர்களுடைய நிலவியல் சூழலுக்கு ஏற்ற உடலமைப்பு, எதிர்ப்பாற்றல் போன்றவையே இருக்கும்.

உதாரணத்துக்கு, வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருந்த பழங்கால மனிதர்களுடைய உடல் நம்மைவிடப் பெரிதாகவும் வலிமை மிக்கதாகவும் இருக்கும். அவர்களுடைய பற்கள், பச்சை இறைச்சியைக் கடித்து இழுக்கும் அளவுக்கு வலு மிக்கதாக இருந்தது. ஆனால், நாம் உயரத்திலும் உருவத்திலும் அவர்களைவிட வலிமை குறைந்தவர்களாக மாறிவிட்டோம். அவர்களுக்கு இருந்ததைப் போன்ற அபாயங்களோ உணவு தேடும் சிக்கலோ நமக்கு இல்லாததுதான் அதற்குக் காரணம். இப்படியாக, காடுகளில் இருந்து தனித்து வாழும் நமக்கு காட்டிலிருந்து வெளியேறக்கூடிய தொற்றுநோய்களுக்கு உரிய எதிர்ப்பாற்றலை இயற்கை வழங்கவில்லை. ஏனெனில், அதற்கான தேவை நமக்கு இருக்கவில்லை. இப்போது அந்தத் தேவையை நாமேதான் செயற்கையாக உருவாக்கிக் கொண்டோம்.

இந்த செய்தியையும் படிங்க…

‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!!

சிக்கன் குன்யா, மஞ்சள் காய்ச்சல், எபோலா போன்ற நோய்கள் தொடங்கி, இன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் வரை பல்வேறு நோய்கள் மனிதர்களிடையே பரவியதற்கும் செயற்கையாகக் காட்டுயிர்களோடு நாமே ஏற்படுத்திக்கொண்ட தொடர்புதான் காரணம். இன்று நாம் எதிர்கொள்ள இந்தத் தொற்றுநோய் பேரிடருக்கு இதுவரை ஆன செலவு, நாம் ஒவ்வோர் ஆண்டும் பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்புக்குச் செய்திருக்க வேண்டிய செலவைவிட 100 மடங்கு அதிகம். அதாவது, இந்தச் செலவில் 100-ல் ஒரு பகுதியைச் செலவிட்டிருந்தாலே இந்தப் பேரிடரைத் தவிர்த்திருக்க முடியும்.

1901-ம் ஆண்டு மஞ்சள் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து இன்றுவரை, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வைரஸ் நுண்ணுயிரிகளாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதுவரை 500,000 வைரஸ் நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், 6,801 சூழலியல் அமைப்புகளில் மனிதத் தலையீடுகளால் நிகழ்ந்த பாதிப்புகள், 376 தொற்று கடத்தும் உயிரினங்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது தெரிய வந்தது.

இந்த ஆய்வு, மனிதத் தலையீடுகள் விலங்கு-வழி நோய்கள் அதிகரிப்பதில் முதன்மைப் பங்கு வகிப்பதை உறுதி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மனிதர்களிடையே தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய திறன் மிக்க வைரஸ் தொற்றுகள் பரவுவது அதிகரித்துள்ளன. பூமியின் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் சீர்கேடுகளே இதற்குக் காரணம். குறிப்பாக, இந்தியாவில் காடழிப்பு நடவடிக்கைகள், பல்லுயிரிய வள அழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அத்தகைய நடவடிக்கைகள், கியாசனூர் காட்டு நோய் போன்ற உள்ளூர் தொற்று நோய்களின் பரவலுக்குக் காரணமாக அமைகின்றன.

உணவு மற்றும் விவசாயத்துக்கான பன்னாட்டு அமைப்பு 2020-ம் ஆண்டு வெளியிட்ட உலக காடுகள் பரப்பளவு குறித்த அறிக்கை (State of World’s Forest report), இந்தியாவின் பல்லுயிரிய வள அழிவுக்கு பெரு விவசாயத்துக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் அழிக்கப்படும் காடுகள் முதன்மைப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிடுகிறது. மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட 2019-20 ஆண்டுக்கான காடுகள் பரப்பளவு குறித்த அறிக்கையின்படி, 11467.83 ஹெக்டேர் காட்டு நிலம், சாலை திட்டங்கள், சுரங்கம், மின்சார இணைப்பு போன்ற திட்டங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு, நிலப் பயன்பாட்டில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆகியவை, நுண்ணுயிரிகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, ஆபத்தான தொற்று நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளாக மாற்றுகின்றன. உதாரணத்துக்கு, துண்டாக்கப்படும் காடுகள், காட்டின் எல்லைகளில் உருவாக்கப்படும் விவசாய நிலங்கள், அழிக்கப்பட்ட காட்டு நிலத்தில் உருவாக்கப்படும் கட்டுமானங்கள் போன்றவை நுண்ணுயிரிகளின் வாழ்விடத்தைச் சிதைப்பதோடு, அவற்றை மனிதர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன. இதன்மூலம், நமக்குச் சம்பந்தமில்லாத பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகளாக உருவெடுத்து, நோய்த் தாக்குதலை மேற்கொள்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், லண்டன் உயிரியல் அமைப்பைச் (Zoological Society of London) சேர்ந்த கேட் ஜோன்ஸ் மற்றும் அவரது குழுவினர், 1940 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 335 தொற்று நோய்களைப் பதிவு செய்தார்கள். அதில், 60.3 சதவிகிதம் தொற்றுகள் மற்ற உயிரினங்களிடம் இருந்து மனிதர்களிடையே பரவியவை. அதுமட்டுமன்றி, அந்த 335 தொற்றுகளில் 71.8 சதவிகித நோய்கள் காடுகளில் வாழும் காட்டுயிர்களிடமிருந்து பரவியவை. அதுமட்டுமன்றி, அவற்றின் எண்ணிக்கையும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வந்ததையும் கண்டறிந்தனர்.

நாம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சூழலியல் மீட்டுருவாக்கத்துக்கான பத்தாண்டு கால கட்டத்துக்குள் தற்போது இருக்கிறோம். 2021 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில், அரசாங்கம், குடிமைச் சமூகம், தனியார் நிறுவனங்கள் என்று அனைத்துமே பூமியின் சூழலியலை மீட்டுருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் ஈடுபட வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்காடுகள் முதல் புல்வெளி நிலங்கள் வரை அனைத்து வகையான காட்டு நிலங்களையும் அவற்றின் இயல்பு நிலைக்கே மீட்டுருவாக்குவதன் மூலம், புதுப்புது தொற்று பரப்பும் நுண்ணுயிரிகளோடு மனிதர்களுக்கு ஏற்படும் தொடர்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தொற்று நோய்கள் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 1990-ம் ஆண்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இந்தியாவில் 61 சதவிகிதமாக இருந்தது. அது, 2016-ம் ஆண்டில் 33 சதவிகிதமாகக் குறைந்தது. கொரோனா தொற்றுப் பரவல் இந்த நிலைமையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டதோடு, இந்தியாவில் இத்தகைய தொற்றுகள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஒரு தொடக்கம் மட்டுமே. இதுநாள் வரை ஆங்காங்கே இருந்த தொற்றுநோய் பிரச்னைகள் இப்போது உலகம் முழுக்கச் சேதங்களை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. நாம் இப்போதே சுதாரித்துக்கொள்ளாவிடில், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகும் என்று உலகளவில் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க…

கத்திரி வெயில்- மே 4ம் தேதி தொடக்கம்..!! 

இந்நிலையில், இன்னமும்கூட மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தொற்று நோய்களில் விலங்கு-வழி தொற்றுகள் குறித்து தனித்துவமிக்க கவனம் செலுத்தத் தவறுகிறது. மேலும், காட்டுயிர் பாதுகாப்பிலும் விலங்கு-வழித் தொற்றுகள் குறித்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம். தன்னார்வ ஆராய்ச்சி அமைப்புகளோடு இணைந்து எங்கெல்லாம் கவனம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இதுபோன்ற அவசரக்கால நடவடிக்கைகளின் முன் திட்டமிடுதல்களும் தொடர் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம், கொரோனா போல் மீண்டுமொரு பேரிடர்க் காலம் உருவாகாமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment