கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று- கண் பார்வை முற்றிலும் பறிபோகும் அபாயம்..!!
குஜராத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு கண் பார்வையைமுற்றிலுமாக பறிக்கும் மியூகோமிகோசிஸ் எனப்படும் பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இதற்கான தடுப்பூசிகளை நாம் கண்டறிந்துவிட்டாலும்கூட, இந்த வைரஸ் பற்றி முழுமையாக நாம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.
கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களிலும் பலருக்கு நீண்ட கால உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்குக் கண் பார்வையை முற்றிலுமாக பறிக்கும் பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் சூரத்தில் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் இந்த மியூகோமிகோசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 60 பேர் சிகிச்சைக்காகக் காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பூஞ்சை பாதிப்பு புதியது இல்லை என்றாலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில் இது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை தொடங்கியதிலிருந்தே இந்த பூஞ்சை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்படும் நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்குக் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த பூஞ்சை நோயால் தீவிரமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குக் கண் பார்வை நிரந்தரமாகப் பறிபோகும் அபாயமும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்திலும் இந்த மியூகோமிகோசிஸ் தொற்றால் எட்டு பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.