குளிர்காலத்தில் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய 5 மூலிகைகள்
குளிர்காலத்தில் பல்வேறு தொற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. பெரும்பாலும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுவார்கள். இந்த குளிர்காலத்தில் ஒரு சில மூலிகைகள் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
மஞ்சள் :
மஞ்சள் சக்திவாய்ந்த மருத்துவ நன்மைகள் நிறைந்தது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது. மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது. மேலும் செரிமானம், இருதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இரத்தத்தை சுத்திகரிக்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.
கொத்தமல்லி :
கொத்தமல்லி தழை, விதை மருத்துவ குணங்கள் நிறைந்தது. கொத்தமல்லி உணவுகளை அலங்கரிக்கவும், நறுமணத்திற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை ஒரு இனிமையான நறுமணத்தை வெளிப்படுத்துகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, கே, சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை குணமாக்க உதவுகிறது. மேலும் பல் வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்க கூடியதாகவும் இது இருக்கிறது. பால் சுரப்பதை அதிகமாக்கும் தன்மை கொத்தமல்லிக்கு இருப்பதால் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு இது இன்றியமையாததாகும்.
இஞ்சி :
காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது. இஞ்சியை சூப், அசைவ உணவுகள், தேநீர், அல்லது பானங்களில் சேர்ப்பதன் மூலம் அதன் நன்மைகளை பெறலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலி, ஜலதோஷம், இருமல் ஆகிய பிரச்சனைகளுக்கும் இஞ்சி நல்ல மருந்தாகும்.
வெந்தயம் :
வெந்தயம் ஒரு தனித்துவமான மூலிகையாகும், இது பண்டைய காலங்களிலிருந்து மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ‘ஏ’ போன்றவைகளும் அடங்கியுள்ளன. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் கொழுப்பு, எடை, வீக்கம், பசி, நெஞ்செரிச்சல், டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க உடனடியாக சரியாகும்.
புதினா:
புதினா நல்ல மணம் நிறைந்த ஒரு மூலிகையாகும். புதினா இலைகளிலிருந்து நிவாரணம் வழங்க முடியாத எதுவும் இல்லை என்றே கூறலாம். இது அஜீரணம், கெட்ட சுவாசம், சளி, மன சோர்வு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தினமும் ஒரு சில புதினா இலைகளை எடுத்து மெல்லுங்கள், அதன் பின்னர் தண்ணீரைக் குடிக்கவும், நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் அன்றாட உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள். டீ, ஜூஸ், சட்னிகளில் அடிக்கடி சேர்த்து சாப்பிடலாம்.
மேற்கூறிய மூலிகைகள் தவிர, ரோஸ்மேரி, துளசி, கற்பூரவல்லி ஆகியவையும் குளிர்காலத்தில் எண்ணற்ற நன்மைகள் வழங்கும் மூலிகையாகும்