கரோனா இரண்டாம் அலை தீவிரமானது ஏன்?-கேள்விகளும், பதில்களும்.!
இரண்டாவது முறையாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், அதற்கான காரணங்கள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் .
கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பை விட தற்போது கூடுதலாக பாதிப்பு இருப்பதற்கு என்ன காரணம்?
கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தன. பின்னர், அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், திருவிழாக்களில் கலந்துகொண்ட மக்களிடம் தொற்று குறித்த பயம் இல்லை. ஒருசிலரே முகக்கவசம் அணிந்தனர். இதனால், நடப்பாண்டு கரோனா பரவல் அதிகமாக உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் – 15 நாட்களுக்கு 144 தடை..!! |
வைரஸின் வீரியத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?
உருமாறிய கரோனா வைரஸால் இங்கு பாதிப்பில்லை. இங்கு ஏற்படும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அனைத்தையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியலாம். ஆனால், இரண்டாம் அலையை மக்கள் கண்டுகொள்ளவில்லையெனில், தொற்றுப் பரவல் கடுமையாகும். கடந்த ஆண்டைவிட 4 மடங்கு பாதிப்பு அதிகமாகும்.
தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?
- தாங்கமுடியாத உடல்வலி,
- சிலருக்கு வயிற்றுப்போக்கு,
- தலைவலி,
- சுவை, வாசனை தெரியாமல் இருப்பது,
- காய்ச்சல்
ஆகியவை தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். இவை இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- இருமல்,
- சளி,
- தும்மல்,
உடல் வலிக்குப் பலர் மருந்துக் கடைகளில் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர்.
அவ்வாறு செய்யக் கூடாது. அதேபோல, வைரஸ் காய்ச்சலுக்கு ஊசி போடக் கூடாது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லையா?
முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் 10 முதல் 40 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 15 நாட்களில் முழுமையாக எதிர்ப்பு சக்தி உருவாகும். தடுப்பூசிகள் போட்ட பிறகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்குத் தொற்று வர வாய்ப்பு உள்ளது. ஆனால், உயிருக்கு ஆபத்தான வகையில் தீவிர பாதிப்பு ஏற்படாது.
பாதிப்பில் இருந்து நோயாளி மீண்டுவிட்டார் என்பதை எப்படிக் கண்டறிகிறீர்கள்?
அனுமதிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் உடல் வலி குறைந்துவிடும். மூன்று, நான்காம் நாட்களில் சுவை, வாசனை தெரிந்துவிடும். செயற்கை ஆக்சிஜன் இல்லாமல், உடலில் ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கும். அனுமதிக்கப்பட்ட 5-வது நாளில் மீண்டும் ஒருமுறை ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், நெகட்டிவ் என்றால் மட்டும் நோயாளி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
சி.டி. ஸ்கேன் பரிசோதனையில்தான் கரோனா பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிய முடியுமா?
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் 70 முதல் 90 சதவீதம் துல்லியமாகத் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். முதலில் மூக்கில் இருக்கும் வைரஸ், தொண்டை, வயிறு பகுதிக்குச் செல்கிறது.
எனவே, தொற்று ஏற்பட்டு 10 நாட்கள் கழித்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் (தொற்று இல்லை) என்று வர வாய்ப்பு உள்ளது. ஆனால், சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தொற்றால் நுரையீரல் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கு என்னென்ன அறிவுறுத்தல்களை வழங்குகிறீர்கள்?
மருத்துவமனையிலிருந்து சென்ற பிறகு தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது. வீட்டில் ஒரே ஒரு கழிப்பறை இருக்கிறது எனில், நோயாளி பயன்படுத்தும் கழிப்பறையை பிளீச்சிங் பவுடர் கொண்டு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சிறுநீர், மலத்தில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது.
இரண்டாம் அலையைத் தடுக்க மக்கள் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி, வாய், மூக்கை முகக் கவசத்தால் மூடி, கையை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தமாக வைத்திருந்தால் தற்போதைய எண்ணிக்கை கால் பங்காகக் குறைந்துவிடும்.
தொற்று அதிகரிப்பால் மருத்துவர்கள், செவிலியர்கள் சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன?
பிபிஇ கிட் எனப்படும் முழுக் கவச உடையை அரை மணி நேரம்கூட தொடர்ந்து அணிந்திருப்பது சிரமம். ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை அணிந்திருக்கின்றனர். ஒருமுறை அணிந்துவிட்டால், அதைக் கழற்றிவிட்டு மீண்டும் பயன்படுத்த முடியாது. சிறுநீர் கழிக்ககூடச் செல்ல முடியாது, உணவு, தண்ணீர் அருந்த முடியாது, வியர்வை கொட்டும், மூச்சுக்காற்று கண்ணில் படும். இந்த சிரமங்களையெல்லாம் மக்கள் உணர்ந்து, தங்களை தற்காத்துக்கொண்டு, தொற்றுப் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.