கரோனா அதிகரிப்பு; சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு..!! - Tamil Crowd (Health Care)

கரோனா அதிகரிப்பு; சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு..!!

 கரோனா அதிகரிப்பு; சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு..!!

கரோனா அதிகரித்து வருவதன் எதிரொலியாக, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அப்போது அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்கால் மெல்ல மெல்லத் தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பெரும்பாலான பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நேற்றைய (ஏப்.12) நிலவரப்படி தமிழகம் முழுவதும் 6,711 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேராக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 1,309 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதில், 95% பகுதிகள் சென்னையில்தான் உள்ளன. தற்போதைய நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 1,119 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 5 நாட்களுக்கு முன்பு 600 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, ஒரே வாரத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

  • சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 212 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 
  • இம்மண்டலத்துக்குட்பட்ட 109-வது வார்டிலிருந்து 126-வது வார்டு வரை அனைத்து வார்டுகளிலும் தலா 6 தெருக்களாவது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளன.
  • முதல் அலையைப் போலவே ராயபுரத்தில் கரோனா வேகமாக பரவிவருகிறது. ராயபுரத்தில் 167 தெருக்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
  • 106 தெருக்களுடன் கோடம்பாக்கம் மண்டலம் 3-வது இடத்திலும்
  •  105 தெருக்களுடன் அண்ணா நகர் 4-வது இடத்திலும் உள்ளன.
  •  ஆலந்தூர் மண்டலத்தில் 96 இடங்களில் கரோனா தொற்று தாக்கம் அதிகமாக உள்ளது. 
  • அம்பத்தூர், திரு.வி.க நகர், அடையாறு, மாதவரம் ஆகிய பகுதிகளிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…

ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது குடியிருப்பில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அப்பகுதி கட்டுபாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகத்தின் தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். இந்நிலையில், சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Leave a Comment