உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!!
சிலருக்கு உடல் எப்போதும் சூடாகவே இருக்கும். ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரையில் உடல் வெப்பம் அதிகரித்தால் காய்ச்சல் என்று அர்த்தம். சிலருக்கு உடல் வெப்பம் அதிகமாக இருப்பதை ஆங்கில மருத்துவம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளில் உடல் வெப்பம் தணிக்கும் உணவு, சிகிச்சைகளைப் பரிந்துரைக்கின்றன.
இந்த செய்தியும் படிங்க…
உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!
வாரத்துக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் விட்டு ஊற வைத்து தலைக்கு குளித்தால் உடல் வெப்பம் தணியும் என்று சொல்வார்கள். சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து சிகைக்காய் போட்டு தலைக்குக் குளிப்பது வழக்கமாக இருந்தது. ஷாம்பு கலாச்சாரத்தில் இதற்கு எல்லாம் நேரம் இருப்பது இல்லை. இதனால் உடல் வெப்பம் அதிகரிப்பதாக பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு சந்தனக் கட்டையை நன்கு தேய்த்து அந்த சந்தனத்தை முகத்தில் பூசி படுத்தால் நல்ல பலனைப் பெறலாம். சருமமும் பொலிவு பெறும். குழந்தைகளுக்கு இதை முயற்சி செய்ய வேண்டாம்.
மாதுளை ஜூஸில் பாதாம் எண்ணெய் விட்டு குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். VITAMIN C அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், கிவி போன்றவற்றை ஜூஸ் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் தணியும்.
இளநீர் உடல் வெப்பத்தைக் குறைக்கும் சிறந்த பானம் ஆகும். முந்தைய நாள் இரவில் இளநீரில் சிறிது பனங்கற்கண்டு போட்டு வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் இதை அருந்தினால் வெப்பம் தணியும். சிறுநீர் பெருகும்.
உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நீர் மோர் அருந்தி வரலாம். வெந்தயத்தை பொடித்து தினமும் அரை டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும். இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் விட்டு இரவு முழுக்க ஊற விட வேண்டும். காலையில் வெந்தயத்தையும் தண்ணீரையும் சேர்த்துச் சாப்பிட உடல் வெப்பம் வேகமாக தணியும்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்வது உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் அளவுக்கு தண்ணீர் அருந்தி வந்தாலே உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும்.
இந்த செய்தியும் படிங்க…
முடி உதிராமல் இருக்க – சில வழிமுறைகள் !!