இரட்டை வாக்குரிமை: ஓட்டுப்பதிவு சரிவுக்கு காரணமா..??
திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு சரிவுக்கு, ‘இரட்டை ஓட்டுரிமை’ கண்டுகொள்ளப்படாமல் இருப்பதே காரணம் என்பது, விவாதப்பொருளாக மாறியுள்ளது.சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு சதவீதம் எழுபது சதவீதத்தை தொட்டிருக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி போன்ற தொகுதிகளில், கடந்த முறையை காட்டிலும், இந்த முறை, ஐந்து சதவீதம் வரை, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துவிட்டதே என்று, பலர், வேதனையுறுகின்றனர்; கொரோனா பரவல் அதிகரித்துவந்த சூழலுடன் ஒப்புநோக்கினால், இது குறைசொல்ல கூடிய அளவு, குறைவான ஓட்டுப்பதிவு அல்ல.ஓட்டு செலுத்தாதவர் எத்தனை பேர்!மாவட்டத்தில், ஏழு லட்சம் வாக்காளர்கள் ஓட்டு செலுத்தவில்லை என்றாலும், நிஜத்தில் இந்த எண்ணிக்கை இந்தளவு அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை.இதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. திருப்பூர், பல்லடம், அவிநாசி போன்ற தொகுதிகள், பனியன், விசைத்தறி, கறிக்கோழி உட்பட தொழிலாளர்கள் நிறைந்துள்ள இடங்கள்; இவர்களில், வெளி மாவட்ட தொழிலாளர் அதிகம்.
ஊரடங்கின்போது, பல தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர். தளர்வுகளுக்கு பிறகு, அனைத்து தொழிலாளரும் திரும்பி வந்தனரா என்பதை உறுதியாக கூற முடியாது. அதேசமயம், வெளி மாவட்டங்களில் இருந்து வேலை தேடி பல தொழிலாளர்கள் வந்துள்ளனர்.பல ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள வெளிமாவட்ட தொழிலாளர் பலர், இங்கேயே நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.ஆனால், பல தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் சொந்த ஊரிலும், வாக்காளர்களாகவே தொடர்கின்றனர்.
ஆதார் எண், வாக்காளருடன் இணைக்கப்பட்டால், இரட்டைப்பதிவை கண்டறிய முடியும்.பயன்படுத்தப்படாத ஓட்டுரிமைபல தொழிலாளர்கள், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் அழுத்தத்தால், சொந்த ஊர்களுக்கே சென்று ஓட்டளிக்கின்றனர். அப்போது, திருப்பூரில் உள்ள ஓட்டுரிமை பயன்படுத்தப்படுவதில்லை.திருப்பூரில், அதிகாரிகள் கணக்கெடுப்பின்போது, தொழிலாளர் இங்கு வசிப்பது தெரியவருவதால், அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் வாய்ப்பு இல்லை.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு . |
அதேசமயம், சொந்த ஊர்களில், வாக்காளராக இருப்போரையும், அங்குள்ள அதிகாரிகளால் நீக்க முடிவதில்லை. ஏனெனில், அவர்கள், தேர்தல்களின்போது, சொந்த ஊர்களில் ஓட்டுரிமையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.இந்த சிக்கலை களைவது என்பது எளிதல்ல; அரசியல் கட்சியினர், அதிகாரிகள் ஒத்துழைப்புடன், விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டும்.இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்கள் எளிதாக கண்டறியப்படும் வரை, இந்தச் சிக்கல் நீடிக்கும்.
சொந்த ஊரில், ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுரிமை நீக்கப்பட்டிருந்தால், ஓட்டுப்பதிவு சதவீதம், இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த உண்மையை உரக்க சொல்ல, அரசியல் கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர்; அதிகாரிகளும் வெளிப்படையாக கூறத் தயங்குகின்றனர் என்பதே யதார்த்தம்.