'இந்த' தவறுகளை செய்தால் வாட்ஸ்அப்பில் உங்கள் ரகசியங்கள் கசியும். - Tamil Crowd (Health Care)

‘இந்த’ தவறுகளை செய்தால் வாட்ஸ்அப்பில் உங்கள் ரகசியங்கள் கசியும்.

 ‘இந்த’ தவறுகளை செய்தால் வாட்ஸ்அப்பில் உங்கள் ரகசியங்கள் கசியும்.

உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் வாட்ஸ்அப் செயலியைக் காதலிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்தளவிற்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்து போய்விட்டது வாட்ஸ்அப். குறிப்பாக உங்களின் தனிப்பட்ட விவரங்களையும் அந்த வாட்ஸ்அப் சேமித்துவைத்திருக்கிறது.

உங்களின் ரகசியம் உங்கள் வாட்ஸ்அப்பில் அடங்கியிருக்கிறது. ஆனால் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரியும்படி செய்துவிடுகிறது. அந்தத் தவறுகள் என்ன, அதிலிருந்து எப்படி திருத்திக் கொள்வது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1.வாட்ஸ்அப்பில் அதிகமான நபர்களை இணைக்காதீர்கள்:

வாட்ஸ்அப்பை பொறுத்தவரை அனைவருக்கும் தங்கு தடையின்றி தகவல் பரிமாற்ற சேவையை வழங்குவதே அந்நிறுவனத்தின் நோக்கம். இதனால் ஒரு நபரின் மொபைல் எண் இருந்தாலே அந்நபர் உங்களை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளலாம். ஆனால் உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருமிடமும் வாட்ஸ்அப்பில் பேச வேண்டிய அவசியமில்லை அல்லவா? அப்படியிருக்கும்போது அவர்கள் எண்களைச் சேமித்துவிட்டு வாட்ஸ்அப்பிலிருந்து விலக்கி வையுங்கள்.

2.நீங்கள் பகிரும் தகவல்களை கட்டுப்படுத்துங்கள்:

ஒரு கட்டத்தில் அதிக சந்தோஷத்தில் இருக்கும்போது அதனை சமூக வலைதளங்களில் பதிவாக வெளியிடுகிறோம். அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள். அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக உங்களின் டிபி யாருக்கு காட்ட வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் தொடர்பில் இல்லாதவர்களுக்கு டிபி காட்டுமாறு வைக்காதீர்கள்.

3. ஸ்டெப் வெரிபிக்கேசனை ஆன் செய்யுங்கள்:

சிம்களை மாற்றுவது போன்ற மோசடியில் அனைவருமே பலியாகும் காலக்கட்டம் இது. அப்படியிருக்கும் பட்சத்தில் 2 ஸ்டெப் வெரிபிக்கேசனை ஆன் செய்து வைத்தால், உங்கள் எண்ணை வேறொரு நபர் பயன்படுத்த முயற்சித்தாலும் ஓடிபி வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். இதன்மூலம் உங்கள் வாட்ஸ்அப்பை வேறு நபர் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கலாம்.

4.ஃபிங்கர்பிரிண்ட் போன்ற லாக் வசதிகளை பயன்படுத்துங்கள்:

ஒருசிலர் வாட்ஸ்அப்பிற்கு ஆப் லாக் எதுவும் போடுவதில்லை. அது தவறான செயல். இப்போது ஸ்மார்ட்போன்களில் ஃபிங்கர்பிரிண்ட் லாக், ஃபேஸ் லாக் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதனைப் பயன்படுத்த ஒருபோதும் மறவாதீர்கள்.

5.உங்கள் ஸ்டேட்டஸை அவசியமற்ற நபர்களிடமிருந்து மறையுங்கள்:

இப்போது நீங்கள் ஸ்டேட்டஸ் போடுகிறீர்கள். அதனை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை அல்லவா? அதனால் உங்களுக்கு அவசியமற்ற நபர்களிடமிருந்து உங்களது ஸ்டேட்டஸை மறைத்து பதிவிடுங்கள். ஸ்டேட்டஸ் செட்டிங்ஸில் அதற்கான வசதி இருக்கிறது

6.குரூப்களில் சேர்க்கும் அனுமதியை கட்டுப்படுத்துங்கள்:

தற்போது வாட்ஸ்அப்பில் யார் வேண்டுமானாலும் உங்களை குரூப்பில் இணைக்கும் வசதி இருக்கிறது. இதனால் உங்களுக்கு தெரியாத நபர் கூட குரூப்பில் இணைக்கிறார். இதனைக் கட்டுப்படுத்த உங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதியை வழங்குங்கள். செட்டிங்ஸில் அந்த வசதியும் இருக்கிறது.

7.கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட்களை சேமிப்பதை தவிருங்கள்:

தற்போது சாட்கள், போட்டோக்கள், வீடியோக்களை கூகுள் டிரைவ் போன்ற கிளவுட் சேமிப்பகங்களில் சேமிக்க வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கூகுள் டிரைவ் போன்றவை பாதுகாப்பனதல்ல என்பதால் அப்படி செய்வதைத் தவிருங்கள். பேக்அப் எடுப்பதை நிறுத்துங்கள்.

8. போலிச் செய்திகள், 18+ செய்திகளை வாட்ஸ்அப்பில் பரப்பாதீர்கள்:

மத்திய அரசு விதிகளைக் கடுமையாக்கியிருக்கிறது. அதன்படி போலிச் செய்திகள், வயது வந்தோர் பார்க்கும் செய்திகள், பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைப் பகிர்வதை நிறுத்துங்கள். அதை ஆதாரமாகக் கொண்டு காவல் துறை உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை.

Leave a Comment