இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை; பொறுமையை இழக்க வேண்டாம் இதிலிருந்தும் மீண்டு வருவோம்: பிரதமர் மோடி நம்பிக்கை..!!
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ முன்களப் பணியாளர்கள் பொறுமையை இழக்க வேண்டாம் இதிலிருந்தும் மீண்டு வருவோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், முழு ஊரடங்கு என்பது கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கடைசி ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க.
10-ஆம் வகுப்பு- மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு.!
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.45 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
முன்னதாக இன்று அவர், மருத்து நிறுவன உரிமையாளர்கள், அதிகாரிகள், மாநில ஆளுநர்கள் என பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வருமோ என்ற சலசலப்பும் ஏற்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சரியாக இரவு 8.45 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் நாம் இன்று மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். கரோனாவால் தங்களின் நெருக்கமானவர்களை இழந்து நிற்கும் மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். அவர்களின் துயரத்தில் நான் துணை நிற்கிறேன்.
ஆனால், இந்த பாதிப்பில் இருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கரோனாவை நிச்சயமாக முறியடிக்க முடியும்.
கரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுனர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என முன்களப் பணியாளர்கள் பலரும் பாடுபடுகின்றனர். தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழலிலும் பொறுமையை இழந்துவிடக் கூடாது.
கரோனா பரவலால் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை நிச்சயமாக அரசு பூர்த்தி செய்யும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது மருந்து உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போரில் முகக்கவசம் முதல் வெண்ட்டிலேட்டர் வரை மருத்துவ சாதன உற்பத்தியை பெரியளவில் செய்துள்ளோம். மருத்துவ உபகரணங்களைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இப்போது இல்லை.
கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியா முழுவதும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது.
மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏழைகள், நடுத்தரப் பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும். போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெறும்.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முயற்சி. புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடத்திலேயே இருக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் பொறுப்பும் அதிகரித்துள்ளது. அது தொடர வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். இயன்றவர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம்.
இந்த செய்தியையும் படிங்க.
தாமதமாகும்- எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணிக்கை- நேரம் மாற்றம்..!!
முழு ஊரடங்கு சூழல் மீண்டும் வராமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. முழு ஊரடங்கு என்பது கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கடைசி ஆயுதம். இதனை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.
கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை மைக்ரோ அளவில் அதிகப்படுத்துவதன் மூலம் முழு ஊரடங்கைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.