ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றிட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை..!!
கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதால் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றிட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் ‘மன்றம்’ நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”கரோனா பரவலினால் தமிழகத்தில் அங்கன்வாடி, பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் வீட்டில் இருந்து இணைய வழியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க
10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!!
ஆனால், பள்ளிக் கல்வித்துறையிலும், தொடக்கக் கல்வித்துறையிலும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட்டு வீட்டில் இருந்து பணியாற்றக்கூடிய நிலையை ஏற்படுத்தித் தராதது துரதிருஷ்ட வசமானதாகும்.
எனினும், அன்றாடம் ஆசிரியர்கள் பள்ளிக்கு பல்வேறு சிரமங்களுக்கு இடையே வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் வராத நிலையில், பள்ளிக்கு ஆசிரியர்கள் அன்றாடம் வந்துபோவது தேவையற்றது.
எனவே, கரோனா 2-வது அலை பரவல், கோடை வெயிலின் உக்கிரம், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களை வீட்டில் இருந்து இணையவழியில் பணியாற்றிடும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.