அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்: தமிழக அரசு..!! - Tamil Crowd (Health Care)

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்: தமிழக அரசு..!!

 அரியர் தேர்வுகள் -ஆன்லைன் முறையில் நடத்தப்படும்: தமிழக அரசு..!!

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரியா் தோ்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது. தோ்வை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தல் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

உடற்பயிற்சி  செய்யாதவர்கள் -கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும்..!! 

இதையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் அரியா் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய அமைப்புகள் ‘அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது’ என தெரிவித்திருந்தன.

இந்த வழக்குகள் கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியா் படிப்புகளை நிா்வகிக்கும் அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதனைத் தொடா்ந்து இந்தப் படிப்புகளுக்கான அரியா் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரியா் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், ‘2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தோ்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தோ்வுகள் நடத்த வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவிக்கவில்லை’ என வாதிட்டாா். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தெரிவித்தது: அரியா் தோ்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தோ்ச்சி என்ற அரசின் உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே தோ்வு நடத்தும் நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவா்கள் அரியா் தோ்வுக்கு விண்ணப்பித்தனா், எத்தனை மாணவா்கள் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனா் என்பது குறித்து முழுமையான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

கல்வியின் புனிதத்தில் எந்தச் சமரசமும் இல்லாமல் ஏதேனும் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு கலந்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வெழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படாது என்றும் பதிலளிக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

ஆசிரியர்கள் -சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்..!! 

இதையடுத்து அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்வுகள் நடத்தப்பட்டது குறித்து ஜூலை மாதம் 2-வது வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வுத் தேதி குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுடன் ஆலோசித்து கல்லூரிகள் அறிவிக்கும், மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Leave a Comment