அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி- TRB தேர்வு மீண்டும் அறிவிப்பு..!!
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,060 விரிவுரை யாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழி தேர்வு, அக்., 28 முதல் மூன்று நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரிய(TRB) தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான நியமனம் குறித்து, 2019 நவம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு 2020 ஜன., 22 முதல் பிப்., 12 வரை, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நியமனத்துக்கான கணினி வழி தேர்வு, அக்., 28, 29, 30ல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சூழலுக்கு ஏற்ப, தேர்வு நடக்கும் தேதி மாறுதலுக்கு உட்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 1,060 காலியிடங்களில் விரிவுரையாளர் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு, 2017 செப்., 16ல் நடந்தது; 1.33 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், நவ., 7ல் வெளியாகின. இதில், 200க்கும் மேற்பட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டு, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் போலீசார் தரப்பில் விசாரணை நடத்தியதில், 199 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு, தரவரிசை பட்டியலில் இடம் பெற்றது தெரியவந்தது.
அவர்கள், தமிழகத்தில் எந்த போட்டி தேர்வையும் எழுத முடியாத வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவின்படி, 2017ல் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான், அக்., 28ல் புதிதாக தேர்வு நடத்தப்பட உள்ளது.