அரசுப் பள்ளிகளில் கற்றல் இழப்பைச் சரிசெய்ய தனி இயக்கம்; Spoken English Classes; முதல்வர் ஸ்டாலின்..!!
பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை:
”சில நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த மரியாதைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!!
ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களின் மரியாதைக்குரியவர்கள். படித்து முடித்துவிட்டாலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எப்போதும் ஆசிரியர்கள்தான். மரியாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களை மதிப்பிற்குரியவர்களாகப் போற்றிப் பாராட்டுகின்ற விழாவாக இது நடைபெறுகிறது.
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு, தொடக்க / நடுநிலைப் பள்ளிகளைச் சார்ந்த 171 ஆசிரியர்களுக்கும், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 171 ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளைச் சார்ந்த 33 ஆசிரியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளைச் சார்ந்த 2 ஆசிரியர்களுக்கும், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் இருவருக்கும் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசு, ரூ.2,500/- மதிப்பிலான வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்கள்.
திமுக 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் 53,005 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு 01.06.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கிப் பணி நியமனம் நிரந்தரம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் இருந்த மாநில வாரியக் கல்வி முறை, மெட்ரிகுலேசன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மற்றும் கீழ்த்திசைக் கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளையும் ஒருங்கிணைத்து சமச்சீர்க் கல்வி முறையை 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தி – கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவை இந்த சமச்சீர்க் கல்வி மூலம் நனவாக்கியவர் கருணாநிதி.
இந்த செய்தியையும் படிங்க…
BREAKING: STATE GOVERNMENT EMPLOYEES- JANUARY 2022 – DAஉயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
தமிழ் மொழிப் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாகக் கற்கச் சட்டம் இயற்றியது. ‘ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் அருள்மொழியைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் நலன் மேம்படத் தேர்வுநிலை, சிறப்பு நிலைப் பதவி உயர்வுகள், புலவர் பட்டயத்தை பி.லிட் பட்டமாக உயர்த்தியமை, குடும்பப் பாதுகாப்பு நிதி உருவாக்கியமை, திருமணக் கடன் – வீடு கட்டும் கடன் வழங்கியமை, முழு ஓய்வூதியம் பெற முப்பது ஆண்டுகள் பணிக்காலம் போதும் என ஆணை வழங்கியமை என்று ஆசிரியப் பெருமக்கள் ஏற்றம் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வுலகில், தன்னைவிட தன்னிடம் கற்றவர் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் ‘அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்’ இனம் மட்டுமே. கரோனா பெருந்தொற்று காலத்திற்குப்பின் பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகளில் பெரிதும் குவிந்து வருகிறது. இதை ஆசிரியர்களாகிய நீங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் போன்றவற்றின் மூலமாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தியும், பள்ளி விழாக்களுக்குப் பெற்றோரை அழைத்து உரையாடியும் விழா நிகழ்வுகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்தும் அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் – குறிப்பாக Spoken English வகுப்புகள் நடத்த வேண்டும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அந்த உன்னதமான பணியை நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணுக்கே உள்ள உணர்வுடன் நிறைவேற்றிக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.
இந்த நிதிநிலை அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு ரூ.32,599.54 கோடி ஒதுக்கியுள்ளது. தனி ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்சத் தொகை இதுவாகும். இருப்பினும், நாட்டில் உள்ள பள்ளிகளையும் கடந்த பத்தாண்டுகளில் படிந்துபோன இருளையும் எண்ணிப் பார்க்கின்றபோது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நாம் மேலும் சில முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும். முன்னாள் மாணவர் சங்கங்களோடு இணைந்தும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழும் நிதி திரட்டி பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அதை நிர்வகிக்கும் குழுக்களில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலரைச் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர் ‘வீடுதேடிக் கல்வி வழங்குதல்’என்ற கொள்கையோடு மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள். இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது. உங்களைப் போன்ற ஆசிரியர் சமூகம் இவ்வியக்கத்தை முன்னின்று வழிநடத்தித் தரவேண்டும் என்று முதல்வர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். நமது உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் மூலம் கல்வி வழங்கப்பட வேண்டும்.
பாடத்திட்டத்தை தாண்டியும் ஒரு மாணவர், நூலகம் சென்று தனக்கு விருப்பமான கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசிக்கும்போதும்; ஓவியங்களை கண்டு ரசிக்கும்போதும்; அவரது ரசனை மேம்படுகிறது. படைப்பாற்றல் வளர்கிறது. அறிவியல்பூர்வமான சிந்தனை ஓங்குகிறது”.
அறிவார்ந்த சமூகம் என்பது வகுப்பறையில் இருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். உங்களைப் போன்ற ஆசிரியர்கள், நூலகத்தில் உள்ள புத்தகங்களைக் குழந்தைகள் வாசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பின்னர், ஆசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த கரோனா காலத்தில் மாணவர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும், அரசின் கரோனா முன்னெச்சரிக்கை செயல்முறை நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
இந்த கலந்துரையாடலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.