அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் – அனில் சகஸ்ரபுத்தே(AICTE)
நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்தத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
தேசிய புதிய கல்விக்கொள்கை 12 ம் வகுப்பில் வேதியியல், கணிதம் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஊக்குவிப்பதாகவும் அந்த வகையில் தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் கூறினார். பொறியியல் படிப்பில் சேர கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருகின்ற போது அவர்கள் முதலாம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்கு அடிப்படையாக விளக்குங்கின்ற கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்களை கட்டாயம் படித்து தேர்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து வகை உயர்கல்வி படிப்புகளிலும் மாணவர்கள் சேருகின்ற போது அவர்களின் திறனை அறியும் வகையில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான ஒரு திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.
ஏற்கனவே JEE, NEET தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.ஆனாலும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிற முக்கிய படிப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதிப்பது தேவையாக உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் மாணவர்களின் திறனை சோதிக்க நேர்முகத்தேர்வோ, அல்லது எழுத்துத் தேர்வோ நடத்தப்பட வேண்டியது அவசியம். அது அநேகமாக Objective வடிவில் இருக்கலாம்.” என கூறியுள்ளார்.
மேலும், “பாடத்திட்டத்தை பொறுத்தவரை பல்வேறு விருப்பத் தேர்வுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசு வரையறுத்துள்ள பாடத்திட்டத்தில் இருந்து அந்தந்த மாநிலங்கள், பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழலுக்கேற்ப பாடங்களைத் தேர்வு செய்து நடத்திக்கொள்ளலாம். B.E., B.Tech., படிப்புகளில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அவசியமானவையே. 11, 12-ம் வகுப்பில் கணிதம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் படிக்கத் தவறியவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சேர கூடுதல் வாய்ப்பை வழங்க உள்ளோம். அதன்படி 11, 12-ம் வகுப்பில் கணிதம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களை தவறவிட்டவர்கள் பொறியியல் முதலாம் ஆண்டில் அதை படித்துக்கொள்ளலாம்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “11, 12-ம் வகுப்பில் எந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்தாலும், வேறு வகையான உயர்கல்வி படிப்புகளில் சேரலாம். ஆனால் அவ்வாறு சேரும் முன், குறிப்பிட்ட உயர்கல்வி படிப்பு தொடர்பான பாடப்பிரிவுகளிலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் முதலாம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்காதவர்கள் அதைக் கற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2-ம் ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். உயர்கல்வி ஆணையம் வருவதால், கல்வி நிறுவனங்கள் எளிதில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முடியும். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி படிப்புகளுக்கு தனித்தனி ஆணையங்கள் என்று இருப்பதை ஒன்றாக்கி, ஒற்றை உயர்கல்வி ஆணையமாக மாற்ற உள்ளோம். இதன் மூலம், அனைத்து பணிகளும் தற்போது நடைபெறுவது போன்றே தொய்வின்றி நடைபெறும். அதில் எந்த மாற்றமும், சிக்கலும் இருக்காது.” என்று கூறியுள்ளார்.
மேலும், “5+3+3+4 என்ற கல்வி முறையை கொண்டுவருவதே பல்வேறு சீர்திருத்தங்கள், வாய்ப்புகளை ஏற்படுத்தத்தான். 5+3+3+4 கல்வி முறை வந்த பின் ஒருவர் எந்த வகையான படிப்புகளிலும் சேர முடியும்.” என்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.