அதிமுக நிர்வாகிகளுடன் ,அரசுப் பள்ளி ஆசிரியர் கூட்டு – ஆசிரியர் சஸ்பெண்ட்.
தருமபுரி மாவட்டம் அரூரில் வசித்து வருபவர் குமார். இவர் அரூர் மாம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அண்மையில், குமார் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் குமார் வீட்டுக்கு வெளியே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அன்று நள்ளிரவு, குமாரின் மனைவி கவிதா ஒரு பையில் பணத்தை கட்டி தூக்கி வீசிய நிலையில், அதை அதிமுக பிரமுகர் நேதாஜி எடுத்துச் சென்றார்.
இதை பார்த்த பறக்கும் படை அதிகாரிகள், நேதாஜியை அங்கேயே மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த ரூ.16.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்தது என்பதும் அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி, சரவணன் ஆகியோர் பணத்தை குமார் வீட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வரச் சொன்னதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி ஆசிரியர் குமார், நேதாஜி, அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு ஆசிரியர் பணப்பட்டுவாடாவில் சிக்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், ஆசிரியர் குமாரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பணியில் இருக்கும் ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.