மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மனுக்களுக்கு 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

 மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மனுக்களுக்கு 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன், பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை கிடப்பில் போடாமல், விண்ணப்பித்த தேதியில் இருந்து 2 மாதங்களில் விசாரித்து தீர்வு காண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செய்தியையும் படிங்க…  

 கல் உப்பு  (Salt) சேர்த்து குளிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன ..??  

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா எடையூரைச் சேர்ந்த ஜி.பாலையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று சொந்த கிராமத்தில் வீடு கட்டியுள்ளேன். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளேன். மூன்று பேரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனது மகன் பட்டாபிராமனும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றினான். திடீரென குடும்பத்தை விட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். இதனால், அவனது மனைவி மற்றும் குழந்தைகளை நானே பராமரித்து வந்தேன்.

திடீரென திரும்பி வந்த என் மகன், வீடு கட்டுவதற்கு கடன் வாங்க எனது வீட்டு ஆவணங்களை கேட்டான். அந்த ஆவணங்களை திருப்பித் தராமல் குடியிருக்கும் வீட்டையும் அபகரிக்கும் நோக்குடன் அடியாட்களை வைத்து மிரட்டினான். இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட கோட்டாட்சியரிடம் மனு அளித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்த கோட்டாட்சியர், எனக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்புத் தொகையாக வழங்க எனது மகனுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டார். அந்த உத்தரவுப்படி அவன் எனக்கு எந்த உதவித்தொகையும் வழங்கவில்லை.

எனது வீட்டை பாதுகாக்க நினைத்து, இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜனவரியில் மேல்முறையீடு செய்தேன். அந்த மேல்முறையீட்டு மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களுக்கான மரியாதையான வாழும் உரிமைக்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும்கூட வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். அதில் ஏற்படும் பணம் மற்றும் கால விரயத்தை கருத்தில்கொண்டே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டமே கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு அதிகாரிகள் செயல்பட்டால் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே அர்த்தமில்லாத ஒன்றாகி விடும்.

அரசியலமைப்பு சட்ட ரீதியாக மூத்த குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்படக் கூடாது. எனவே, இந்த சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும். மனுதாரர் அளித்துள்ள மனுவையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் 2 மாதங்களில் தீர்வு கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியையும் படிங்க…

தங்க நகைகளுக்கு இன்று (JUNE 15)முதல் ஹால்மார்க் கட்டாயம்..!!  

முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினமான நேற்று, மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பராமரிப்பை பேணும் வகையில் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment