பூனை – செல்லப்பிராணி(வளர்ப்புப்பிராணி)
பூனை -வளர்ப்புப்பிராணி:
வீட்டின் நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வலம் வருபவை நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள். அவற்றிலும் முக்கியமாக நாய், பூனைக்கு முக்கிய இடம் உண்டு. சிறுவர் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பூனை என்றால் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் பூனைகளை தன் விளையாட்டு தோழனாக எண்ணி விளையாடுவதும், பூனைகளைக் கட்டிப்பிடித்து கொஞ்சுவதும், முத்தம் கொடுப்பதும் என பல வகைகளில் தன் அன்பை வெளிக்காட்டுவர். பல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படுக்கை அறை வரை பூனைகளை அனுமதிப்பர்.
பூனைகளும் தன் அன்பை காட்ட நம்மையே சுற்றிச் சுற்றி வரும். மேலே விழுந்து தன் அன்பை வெளிப்படுத்தும். நம்மை கால்களால் பிறாண்டும். தன் அழகான குரலால் மனிதர்களைப் போலவே நம்முடனே பேசும்.பூனையின் சுத்த தன்மைக்காகவே பலரும் இதனை செல்லப்பிராணியாக வளர்ப்பர்.
”பூனை தீவுகள்”:
சில நாடுகளில் பூனைகளை அதிர்ஷ்டம் அளிக்கும் விலங்காக எண்ணுகின்றனர். அதிலும், ஜப்பானியர்களுக்கு பூனை வளர்க்கும் ஆர்வம் மிக அதிகம் என்றே கூறலாம். பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்து வருகிறது. ஜப்பானில் உள்ள சில தீவுகளில் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகம் உள்ளனவாம். பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானில் 12-ற்கும் மேற்பட்ட தீவுகள் ”பூனை தீவுகள்” என்றே அழைக்கப்படுகின்றன. அதிலும் டாஸிரொஜிமா, ஓஷிமா இந்த இரண்டு தீவுகளிலும் அதிகமான எண்ணிக்கையில் பூனைகள் பல காரணங்களுக்காக வளர்க்கப்படுகின்றன.
இந்தத் தீவுகளைப் பார்த்தால் மனிதர்கள் பூனைகளை வளர்க்கிறார்களா? பூனைகள் மனிதர்களை வளர்க்கின்றனவா? என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு தோன்றும். அந்த அளவிற்கு பூனைகள் வளர்க்கப்படுகின்றன. எதற்காக பூனைகளை இந்த தீவு மக்கள் இப்படி வளர்க்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒரு காலத்தில் டாஸிரொஜிமா தீவு முழுதும் பட்டு உற்பத்தி நன்றாக நடைப்பெற்றதாகவும், எலிகளால் பட்டு உற்பத்தி தொழில் பாதிப்புக்குள்ளானதால், எலிகளை ஒழிக்க அதிக அளவில் பூனைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதுபோலவே ஓஷிமா தீவில் மீனவர்கள் வாழ்ந்ததால் மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்திய எலிகளை அழிக்க இத்தீவு மக்கள் அதிக எண்ணிக்கையில் பூனைகளை வளர்த்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது ஓஷிமா தீவில் பூனைக்கென்றே ஒரு கோயில் உள்ளது. இந்த தீவானது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்சொன்ன இந்த இரண்டு தீவுகளிலும் சுற்றுலாப் பயணிகள் நாய்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூனைகளை காண பூனைப் பிரியர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலா வர ஆர்வம் காட்டுகின்றனர். பூனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்கள் இந்த தீவில் படமாக்கப்படுகின்றன. இந்தத் தீவு ஜப்பானிய மக்களால் ”பூனைகள் தீவு” என்றும் அழைக்கப்படுகின்றன. இதேப்போல கிரிஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் பூனைத் தீவுகள் உள்ளன.
அண்டார்டிகா, ஆஸ்திரேலியா மற்றும் குளிர்ப்பிரதேசங்களை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் பரவலாக பூனைகள் காணப்படுகின்றன. ஜப்பானைப் போலவே பண்டைய எகிப்தில் வழிப்பாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், பூனைகளை வீட்டில் வளர்த்து வணங்கினர்.
பிரமிடு கட்டிய எகிப்தியர்கள்:
பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய எகிப்தின் சமூக மற்றும் மத நடைமுறைகளில் பூனைகள் குறிப்பிடப்படுகின்றன. பல பண்டைய எகிப்திய தெய்வங்கள் பூனைப் போன்ற தலைகளால் சித்தரிக்கப்பட்டன. பூனைகளின் பாதுகாப்புச் செயல்பாடு இறந்தவர்களின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
பூனைகளை நேசிப்போம்:
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பூனைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. வீடுகளில் உள்ள எலிகள் தானியங்களை
உண்ணக் கூடாது என்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. ஒரு பூனை பிறந்து முதல் 6 அல்லது 8 வாரங்களில் அதற்கு நல்ல அனுபவங்கள் ஏற்பட்டால் பூனைகள் மனிதர்களுடன் நன்றாக பழகும். பூனைகள் மெதுவாக அவற்றின் கண்களை மூடித் திறந்தால் நம்மிடம் அவை காட்டும் பாசத்தின் அடையாளமாக அச்செயல் பார்க்கப்படுகிறது. அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே பூனைகள் மெதுவாக கண் அசைக்கும்.
பூனைக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் அனைத்தும் கிடைத்தப் பிறகே, பூனைகள் மற்ற பூனைகளுடனும், விலங்குகளுடனும் நட்பு பாராட்ட விரும்புகின்றன. உங்களை பார்க்கப்பிடித்தால் மட்டுமே பூனை சோம்பல் முறிக்குமாம்.எனவே பூனைகளின் உடல் அசைவுகளை புரிந்துக்கொண்டு அவற்றின் மேல் அன்புச் செலுத்தலாம்.