புனர்பூ தோஷத்தை உருவாக்கும் கிரகங்களும், பரிகாரங்களும்-அவை என்னவென்று பார்ப்போம்..??

 புனர்பூ தோஷத்தை உருவாக்கும் கிரகங்களும், பரிகாரங்களும்-அவை என்னவென்று பார்ப்போம்..??

புனர்பூ:

புனர்பூ என்றால் நம்முடைய தமிழில் சேர்க்கை அல்லது தொடர்பு என்று பொருள். ஒருவருக்கு இருகிரகங்கள் தொடர்பு பெற்று செயல்படும் பொழுது யோகமாகவோ அல்லது தோஷமாகவோ மாறும். இவற்றையே அறிவியல் ரீதியான நியூட்டனின் விதி “ஒவ்வொரு வினைக்கும் (செயலுக்கும்) அதற்கு இணையான எதிர் வினை உண்டு” என்பது இவற்றிற்கு பொருந்தும். இந்தச் செயலில் இருந்து ஒரே அடியாக நாம் தப்பிக்க முடியாது அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

புனர்பூ தோஷ முடையவர்கள் குணாதிசயங்கள் :

புனர்பூ தோஷ முடையவர்கள் குணாதிசயங்கள் எப்பொழுதும் மனதில் தெளிவு இல்லாமல் குழம்பிய நிலை, சமூகத்தில் கலகலப்பு இல்லாமல், சுற்றத்தாரையும் குழப்பும் தன்மை, சஞ்சல நிலை, சந்தேகம், மற்றவர்களோடு சேரமுடியாத மற்றும் சகஜமாக பழக முடியாத நிலை, யாரிடமும் ஆலோசனை கேட்க முடியாத நிர்பந்தம், தன்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கி கொள்ளுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தோஷம் வலிமையாக இருந்தால் கணவன் – மனைவி பிரிவை கொடுத்து தனிமையில் உட்கார வைக்கும்.

எதிர்மறை எண்ணம் :

புனர்பூ தோஷம் பெற்றவர்கள் அவர்கள் செயல்களில் எல்லாவற்றிலும் கணக்குப் பார்த்து வேலையை செய்யும் நிர்பந்தம். இவர்கள் மற்றவர்களை சந்தேக கண்ணோடு அல்லது குற்றவாளியாக பார்க்க வைக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் இணக்கம் இல்லாமல் மனநோய்க்கு தள்ளப்படுவார்கள். சாப்பிடும் போது உணவை எல்லாவற்றையும் கலந்து ஒருவித புதுவித உணவாக உண்ணும் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணம் அதிகம் உள்ளதால் சுப காலத்திலும் துக்கமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மனஅழுத்தம் (stress) :

இந்த புனர்பூ தோஷத்திற்கு முக்கிய கதாநாயகர்கள் சனியும் சந்திரனும் ஆவார்கள். உடலில் வரும் எல்லாவித முக்கிய நோய்களுக்கும் காரணம் மனஅழுத்தம் (stress) என்பது மருத்துவ ஆராய்ச்சியின் கூற்று. இவற்றிக்கு முதல் காரணகர்த்தா மனம் என்கிற சந்திரன் ஆகும். ஒருவருடைய ஓட்ட செயலை திசையை வெவ்வேறு உருவத்தில் மாற்றும் தன்மை கொண்டது. இரண்டாவது காரண கர்த்தா மற்றும் துர்செயலை செய்ய வைக்கும் சனி ஆகும். உதாரணமாக நாம் போகும் ஊர் சரியான தண்டவாள பாதையில் ரயில் செல்லவில்லை என்றால் தவறான ஊர் போக நேரிடும்.

சிந்தனை என்கிற ஓட்டத்தில் மிதப்பவன் ஒளி பொருந்திய சந்திரன், அவர் ஒரு ராசியில் 2.25 நாழிகையில் பயணம் செய்கிறார் அதற்கு எதிர்மாறாக இருள் கிரகமான சனி ஒரே ராசியில் 2.5 வருடம் மெதுவாக பயணம் செய்கிறார். இவ்வாறு எதிரும் புதிருமான கிரகங்கள் ஒரே கோட்டில் இருக்கும் பொழுது தோஷத்தை கொடுத்து அந்த பாவத்தையும் கெடுத்துவிடுகிறது. நம் நாட்டின் குருமார்கள் இந்த ஓட்டத்தை கட்டுக்குள் கொண்டு சன்னியாச நிலைக்குச் சென்று ஆன்மீக தொண்டு ஆற்றியுள்ளார்கள்.

சந்திரன் – சனி சேர்க்கை:

புனர்பூ தோஷம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சிறு விளக்கமாக பார்க்கலாம். சந்திரன் – சனி சேர்க்கை, சனியின் பார்வை, முக்கியமாக சப்தமம் மற்றும் கர்ம பாவ பார்வையும் அதிக தோஷத்தை ஏற்படுத்தும். சந்திரன் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் சனி அமர்வது அல்லது சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்ரட்டாதியில் சந்திரன் அமர்வது தோஷத்தை உண்டு பண்ணும். இவற்றில் சனி – சந்திரன் மின்னணு காந்தம் போல திரிகோணத்தில் இவர்கள் தோஷத்தை உண்டு பண்ணுவார்கள் என்பது சூட்சம விதி.

மகர ராசி:

சனியின் ஆதிபத்தியமான மகரம்/ கும்பம் ராசிகளில் மற்றும் சந்திரன் வீடான கடக ராசியில் தொடர்பு என்ன வென்று பார்ப்போம். கும்பத்தை விட மகர ராசி தொடர்பு அதிக தோஷத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இங்கு குரு நீச்சம், சந்திரன் நட்சத்திரமான திருவோணம் நான்கு பாதமும் இங்கு உள்ளது. முக்கியமாக சனியின் ஆட்சி வீடு. அதுமட்டும் இல்லாமல் நீர், நிலம் தொடர்பு கொண்ட இரட்டை தன்மை கொண்டது. கும்ப ராசிக்கு அந்தத் தன்மை கிடையாது அதனால் அவ்வளவு தோஷத்தை ஏற்படுத்தாது.

அதுவே நேர் எதிர் சந்திரன் வீடான கடகத்தில் சனியின் நட்சத்திரமான பூசம் நான்கு பாதமும் அங்கு செவ்வாய் நீச்சமும் குரு உச்சமும் கொண்டது. சந்திரன் சாரத்தில் சனியும், சனியின் சாரத்தில் சந்திரனும், நெருங்கிய பாகையில் அதிக தோஷம் தரும். சந்திரன் தொடர்பு பெற்ற சனியானவர், கோட்சர சனி தனது உச்ச ராசியிலிருந்து நீச்ச ராசிக்கு செல்லும்போது தோஷத்தை அதிகம் உண்டுபண்னுவார்.

சூட்சம விலக்குகள்:

மேலே கூறிய அனைத்தும் பெரிய தோஷம் என்று கூறிவிட முடியாது அதெற்கும் ஒரு சில சூட்சம விலக்குகள் உண்டு. எல்லா இடத்திலும் மற்ற சுப கிரகங்களோடு சேரும்போது தோஷத்தை அவ்வளவாக கொடுத்து விடாது அதற்கு மாறாக யோகமா செயல்படும். அவை என்னவென்று பார்ப்போம்.

தோஷம் வேலை செய்யாது:

தேய் பிறை சந்திரன் பாவியாக கூறப்படுகிறது. அதனால் இந்த கூட்டணியில் வளர்பிறை சந்திரன் பாதிப்பு ஏற்படுத்தாது. வளர்பிறை சந்திரன் உச்சம், ஆட்சி, நட்பு வீடுகளில் இருக்க, அவரை சனி பார்த்தால் சந்திர திசையில் ஜாதகங்களுக்கு ராஜயோகம் உண்டு என்று ஜோதிட சித்தர்கள் கூற்று.

தோஷத்தை கொடுக்கும் கிரகங்களை குருவோ அல்லது சூரியனோ பார்த்தால் தோஷம் அகலும் . அது தவிர குரு அல்லது சூரியன் நட்சத்திரத்தில் சனி அல்லது சந்திரனோ அமர்ந்தாள் தோஷம் வேலை செய்யாது.

இதுதவிர லக்கின யோகராக சனியோ சந்திரனோ இருந்து விட்டால் தோஷம் யோகாமாக செயல்படும். இது போன்ற அமைப்பு பல மகான்களுக்கு உண்டு.

இந்த தோஷமானது ஜாதகத்தில் உள்ள அந்தெந்த பாவத்தின் காரக தன்மையின் ஓட்டத்தை அதிகப்படுத்தி தடையை உண்டாக்கும். இவை அனைத்தும் பாவத்திருக்கு பாவம் மாறுபடும். புனர்பூ தோஷம் திருமண வாழ்க்கையை மட்டும் பிரச்சனை கொடுக்காது, மற்ற பிரச்சனைகளும் தரவல்லது.

எடுத்துக்காட்டாக 4ம் பாவத்தில் சனி சந்திரன் தொடர்பு பெற்றால் சுகத்தை கெடுக்கும் அதுதவிர முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். குடும்ப களத்திர பாவங்களன 2,7ல் தொடர்பு பெற்றால் திருமண பந்தத்தை ஏற்படுத்தாது, அப்படியே ஏற்பட்டாலும் குடும்ப உறவை பிரிக்கும் அல்லது வேறு திருமணம் செய்ய மனம் நாடும்.

ஐந்தாம் பாவத்தில் சனியின் சேர்க்கை சந்திரனோடு சேர்க்கையை பெறும்போது அதோடு சுக்கிரன் புதன் சம்பந்த ஏற்பட்டால், ஆண் அல்லது பெண் சிறுவயதிலே காதல் வயப்பட்டு, பெரியவர்கள் சொல் பேச்சு கேட்காமல் தவறான முடிவை எடுப்பார்கள், பின்பு வருந்துவார்கள். இந்த காலகட்டத்தில் கர்மாவின் பிடியில் சிக்காமல் இருக்க எந்த செயலையும் சிறிது தள்ளி போட்டு நிதானமாக யோசித்து செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் பாவத்தில் தொடர்பு ஏற்படுத்தினால் வேலையில் வெறுப்பு ஏற்பட்டு சொந்த தொழிலை தவறாக செய்ய வைக்கும்.

இவை அனைத்தும் கோச்சாரம் அல்லது தசாபுத்தி காலங்களில் நடைபெறும். இதற்காக எந்நேரமும் பயந்து கொண்டே இருக்க வேண்டியதில்லை.

புனர்பூ தோஷம் சூட்சம பரிகாரம்:

அமைதி, செயலில் நிதானம், தியானத்தின் மூலம் கடவுளை நாடல். பழம் பெரும் கோவிலுக்கு சென்று தியானம் செய்வது அவசியம். தினமும் யோகா பயிற்சி அவசியம். இவற்றையே பல்வேறு குருமார்கள் மற்றும் கடவுளின் அவதாரங்கள் இந்த தோஷத்தில் இருந்து யோகமாக மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை வணங்கி வழிபடலாம். எடுத்துக்காட்டாக பெரியவா, ஆதிசங்கர், சாயிபாபா, ராமானுஜர் மற்றும் இன்னும் பல்வேறு குருமார்களை கூறலாம்.

ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தல் அல்லது திருமாங்கல்யம் வாங்க உதவி செய்யலாம்.

குலசாமி, காஞ்சி காமாட்சி, திருமணஞ்சேரி, திருவிடந்தை, ராமேஸ்வரம், சந்திரமௌலீஸ்வரர் வழிபாடு, சூரியன் வெளிச்சம் பெரும் அனைத்து கோவில்களும்.

பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து – திருவண்ணாமலை அல்லது பெருமாள் கோவில்களில் கிரிவலம் செல்வது.

வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு தானம். ஏழை தொழிலாளிக்கு வஸ்திரம் மற்றும் செருப்பு வாங்கி கொடுத்தால் நன்று.

வெயிலில் வாடும் மக்களுக்கு நீர் அல்லது மோர் பந்தல் அமைத்தல்.

சந்திரனின் ஸ்தலமான திருப்பதிக்கு நடந்து சென்று வெங்கடாசலபதியை தரிசிப்பது. சூரியன் / குரு பரிகார ஸ்தலங்கள் தரிசிக்கலாம்.

இந்த நோய் தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே குருமார்கள் சிலை அல்லது சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் சுத்தமான முறையில் பயப்பக்தியுடன் பூஜை செய்யலாம்.

விநாயகர், ஆஞ்சநேயர் கோவில் சென்று, கோவிலில் தெய்வங்களுக்கு பிடித்த உணவை பிரசாதமாக கொடுக்கலாம்.

இந்த அனைத்து பரிகாரங்களும் திங்கள்/ சனிக்கிழமைகளிலும் மற்றும் சந்திரன் அல்லது சனி நட்சத்திர நாட்களில் பரிகாரம் செய்வது நன்று.

 உடல் ரிதியான மாற்றம்:

பரிகாரங்கள் தவிர மனம் மற்றும் உடல் ரிதியான மாற்றங்களும் நாம் செய்யவேண்டும். கடையில் உள்ள பாக்கெட் உணவுகள், ரெடிமேட் உணவுகள், பழம்குழம்பு மற்றும் சுத்தமில்லாத உணவுகள் உண்ணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு உடலில் சனி நீண்ட கால நோயை உண்டுபண்ணுவார்.

சனிக்கு பிடிக்காத நீதிக்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இந்த தோஷம் உள்ளவர்களை அதிகமாக தாக்கும் தன்மை கொண்டது.

நம் மன ஓட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர பயிற்சி செய்யவேண்டும். எது நமக்கு இல்லை என்று இருக்கிறதோ அவற்றை தேடாமல் மாற்று பாதையை சந்தோஷமாக தேட வேண்டும். திருமணம், சொந்த தொழிலை அல்லது ஒரு செயலை செய்யும் முன்பு பலமுறை யோசித்து நிதானமாக செய்யவேண்டும்.

சந்திரன் என்பது உணவு சனி என்பவர் கடின உழைப்பாளி. அதனால் ஏழை தொழிலாளிக்களுக்கு மற்றும் நாட்பட்ட நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

Leave a Comment