தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி:5 சவரன் நகை கடன் தள்ளுபடி – தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு..??

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி:5 சவரன் நகை கடன் தள்ளுபடி – தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு..??

 கூட்டுறவு வங்கிகளில், நகை கடன் வாங்கியவர்களிடம் இருந்து ‘ஆதார்’ எண் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் வாங்கி வருகின்றனர்.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன.

தேர்தல் வாக்குறுதி : 

அவை 2011 முதல் 2020 டிச., வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகை கடன் வழங்கியுள்ளன. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியாக, ‘கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது.இதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. 

நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை, அக்கட்சி லோக்சபா தேர்தலின் போதும் அறிவித்திருந்தது. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில், 2018 – 19, 2019 – 20, 2020 – 2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

அசல் ஆவணங்கள் : 

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், நகை கடன் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகை கடன் வைத்த போது வழங்கிய அசல் ஆவணங்களை எடுத்து வருமாறு கூறி வருகின்றனர். இதனால் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment