தமிழ்நாட்டில் NEET தேர்வை தடை செய்ய புது சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் தகவல்..!!

 தமிழ்நாட்டில் NEET  தேர்வை தடை செய்ய புது சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் தகவல்..!!

தமிழ்நாட்டில் NEET தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில், புதிதாகச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்குக் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கப்படும் என்று சுகாதாரத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் NEET என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்தது. இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

PG மற்றும் UG மருத்துவ படிப்புகளுக்கும் தனித்தனியாக NEET தேர்வு நடத்தப்படுகிறது. அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

NEET தேர்வு:

இந்த NEET தேர்வுக்குத் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. இந்த நீட் தேர்வின் மூலம் நகர்ப்புற மற்றும் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே அதிக இடங்களைப் பெறுவதாகவும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இதில் போதிய இடம் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக ஆட்சியில் NEET  ஒழிக்கப்படும் என திமுக தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். இருப்பினும், இந்த ஆண்டு வரும் செப். 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபை கூட்டத்தொடரில் சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பைத் தாக்கல் செய்தார், அதில், “தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்குக் கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

புதிய சட்டம்:

அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனைச் செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் NEET தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

அதிமுக ஆட்சி:

இது மருத்துவக்கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தைச் சட்டசபையில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும் அச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment