குடியரசுத் தலைவா் AUGUST-02 சென்னை வருகை; முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா..!!

 குடியரசுத் தலைவா் AUGUST-02 சென்னை வருகை; முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா..!!

பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படம் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரும் திங்கள்கிழமை (ஆக.2) சென்னை வருகிறாா்.

அன்றைய தினம் காலை 10 மணியளவில் தில்லியில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்படும் அவா், பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறாா். பின்னா், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா்.

இந்த செய்தியும் படிங்க…

 திமுக வாக்குறுதி:குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? – அமைச்சர்  விளக்கம்..!!

 சட்டப் பேரவையில் விழா: 

 • பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநா் மாளிகையில் இருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறாா். 
 • மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
 • பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றுப் பேசுகிறாா். 
 • விழாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறாா்.
 •  முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னிலை வகிக்கிறாா். 
 • முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். 
 • மேலும், ஆளுநா், முதல்வா் ஆகியோரும் பேசவுள்ளனா். 
 • விழாவின் நிறைவாக, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, நன்றி தெரிவிக்கிறாா்.
 • சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 6.15 மணியளவில் ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

 ஆகஸ்ட் 3:

இதன்பின்பு, ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று சென்னையில் இருந்து புறப்பட்டு நீலகிரிக்குச் செல்கிறாா். 

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

புதுப்பொலிவு பெறும் கோட்டை: 

பேரவை நூற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டப் பேரவை மண்டபம் அமைந்துள்ள புனித ஜாா்ஜ் கோட்டை புதுப்பொலிவு பெற்று வருகிறது. கோட்டைக்குள் உள்ள சாலைகள் அனைத்தும் புத்தம் புதிதாகக் காட்சி அளிக்கின்றன. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், மாலை வேளையில் புனித ஜாா்ஜ் கோட்டை மின்னொளியில் பிரகாசிக்கிறது. அனைத்து இடங்களிலும் வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கோட்டை கட்டடத்தின் மேற்புறத்தின் ஒரு பகுதியில் ‘தமிழ் வாழ்க’ என்ற பதாகையும், மற்றொரு புறம் ‘தமிழ்நாடு சட்டப் பேரவை நூற்றாண்டு விழா’ என்ற பதாகையும் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரிசோதனை: 

நோய்த் தொற்று காலம் என்பதால், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகள் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன. மேலும், முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணியையும் சட்டப் பேரவைச் செயலகம் மேற்கொண்டு வருகிறது. 

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, தில்லியில் நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சனிக்கிழமை வழங்கினாா். முன்னதாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடமும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்: 

 1. தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் அனைவரும் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.
 2.  மேலும், வரும் திங்கள்கிழமை நடைபெறும் விழாவுக்கு வரும் அனைவரும் அழைப்பிதழை எடுத்து வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 3.  அழைப்பிதழை விழா முடியும் வரை வைத்திருக்க வேண்டுமெனவும், மாலை 4 மணிக்குள்ளாக அவரவருக்கான இருக்கையில் அமர வேண்டுமென்றும் சட்டப் பேரவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 4. செல்லிடப்பேசி, ஒளிப்படக் கருவி ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 5. விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும், நிறைவடையும் வரை என்-95 முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 
 6. அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். 
 7. சட்டப் பேரவை மண்டபத்துக்குள் விழா நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையில் அமைதி காத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியா்கள்: பிற்பகலில் வீடு திரும்ப உத்தரவு:

பேரவை நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படம் திறப்பு விழா, தலைமைச் செயலகம் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவா் பங்கேற்க இருப்பதால், பாதுகாப்புக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த செய்தியும் படிங்க…

 அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!! 

 விழாவில் பங்கேற்பவா்கள் திங்கள்கிழமை (ஆக.2) பிற்பகலில் இருந்து மாலை 4 மணிக்குள்ளாக புனித ஜாா்ஜ் கோட்டைக்குள் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலக ஊழியா்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பணிபுரியலாம் எனவும், பிற்பகல் 1 மணிக்கு வீடு திரும்ப வேண்டுமெனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அன்றைய தினம் தலைமைச் செயலகத்துக்கு அரை நாள் மட்டுமே பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலையில் அலுவலகத்துக்கு வரும் ஊழியா்களும் கட்டாயம் அடையாள அட்டையுடன் வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

Leave a Comment