ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பள்ளியில் இருக்கலாம் – அன்பில் மகேஷ்..!!

 ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுடன்  பெற்றோர்களும் பள்ளியில் இருக்கலாம் – அன்பில் மகேஷ்..!!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வரும் போது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தனர். தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.

கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால், அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

வருகிற 1ஆம் தேதி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல் முறையாக 1ஆம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம்.

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இந்த தொற்றை விட மிகப்பெரிய தொற்று குழந்தைகளின் மனநிலை தான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதனை மையப்படுத்தி பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment