இந்தியாவில் Delta Plus தீவிரம்: தமிழகத்தில் முதல் மரணம் பதிவு..!!
கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இறந்ததாக தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா பிளஸ் மாறுபாடு காரணமாக பதிவான முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழகத்தில் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று மாலை தெரிவித்தது.
சென்னையைச் சேர்ந்த 32 வயதான செவிலியர் ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் புதிய டெல்டா பிளஸ் மாறுபாட்டிலிருந்து (Delta Plus Variant) மீண்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. “மதுரை நோயாளியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது ‘டெல்டா பிளஸ்’ மாறுபாடுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
இருப்பினும், இறந்த நோயாளியின் முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வரை, மகாராஷ்டிராவில் ‘டெல்டா பிளஸ்’ மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) குறைந்தது ஒன்பது பேருக்கு புதிய மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது.
மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க வேண்டும்,
பரவலான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்,
தடுப்பூசி செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும்
என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டறியப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், SARS-CoV-2 இன் டெல்டா பிளஸ் மாறுபாடு
ஆந்திராவின் திருப்பதி மாவட்டம்,
குஜராத்தில் சூரத்,
ஹரியானாவின் ஃபரிதாபாத்,
ஜம்மு-காஷ்மீரில் கத்ரா,
ராஜஸ்தானில் பிகானேர்,
பஞ்சாபில் பாட்டியாலா மற்றும் லூதியானா,
கர்நாடகாவில் மைசூரு,
தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் காஞ்சிபுரம்
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மே மாதத்தில் மத்திய பிரதேசத்தில் COVID-19 நோயால் இறந்த இரண்டு நோயாளிகள் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை மொத்தம் எட்டு பேர் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.