ஆஸ்பிரின் : ஹார்ட் அட்டாக் முதலுதவி சிகிச்சை- மிகவும் முக்கியமான மாத்திரை..!!

 ஆஸ்பிரின் : ஹார்ட் அட்டாக் முதலுதவி சிகிச்சை- மிகவும் முக்கியமான மாத்திரை..!!

அதிக இரத்த அழுத்தம் அல்லது அதனுடன் கூடவே சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடற்பருமன், மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களால் Acute myocardial infarction எனும் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயத் தசைகளுக்குச் செல்லும் கொரோனரி இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதன்காரணமாக இருதயத்தின் தசைகள் செயலிப்பதால் இருதயத் துடிப்பு மற்றும் இருதயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் தடைபடுகிறது.

 இதில் ஏற்படும் அதிகப்படியான வலி ஒருபக்கம் என்றால், இந்த இரத்தம் தடைபடுவதால் மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவும் குறைந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதும் உடனடியாக முதலுதவி சிகிச்சை தொடங்கப்படவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பல்வேறு பாதிப்புகளையும், பல சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடும்.

இப்படி மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை என்பது,

முதலில் இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் thrombolytic மருந்துகள் கொடுப்பது. 

இரண்டாவது ஆஞ்சியோகிராம் எனும் இரத்தக் குழாய் அடைப்பைக் கண்டறியும் பரிசோதனை. 

மூன்றாவது தேவைப்படுபவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க வாழ்க்கை முறை மாற்றங்கள்.

இருதயத்தின் இரத்தக் குழாய் அடைப்பை தற்காலிகமாக நீக்க உதவும் Temporary Thrombolytic drugs எனப்படும் மாரடைப்புக்கான முதலுதவி மாத்திரைகளில் மிகவும் முக்கியமான மாத்திரை ஆஸ்பிரின்

உயிர் காக்கும் மருந்துகள்:

காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு பண்டைய எகிப்தியர்கள் வில்லோ மரத்தின் பட்டைகளை உபயோகித்தியிருக்கிறார்கள். இதை கவனித்த கிரேக்க மருத்துவரான ஹிப்போக்ரேடிஸ், தனது மருத்துவக் கையேடுகளில் அதன் உபயோகம் குறித்து எழுதினார். ஆனாலும், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான், இந்த உலகம் வில்லோ மரத்தின் மகிமையை உணர்ந்து கொண்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில், எட்வர்ட் ஸ்டோன் என்ற கிறிஸ்தவ மதகுரு, ஒரேசமயத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐம்பது பேருக்கு, இந்த வில்லோ மரப்பட்டையை காயவைத்து நுணுக்கித் தர, அவர்கள் அனைவரும் காய்ச்சலில் இருந்து முழுமையாகக் குணமடைந்தனர். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் ராயல் சொசைட்டிக்கு கடிதம் எழுதினார். 

பின்னர் ஹென்றி என்ற ஃபிரெஞ்சு மருந்தாளுநர் அந்த மரப்பட்டையிலிருந்து சாலிசிலிக் அமிலத்தை தனியாகப் பிரித்தெடுக்க, ‘ஸ்பைரியா’ என்ற தாவர இனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின் என்ற மருந்து முதன்முதலில் உபயோகத்திற்கு வந்தது.

ஜெர்மனியின் பிரபல மருந்து கம்பெனியான பேயர், அசிடைல் சாலிசிலிக் ஆசிட் என்ற ஆஸ்பிரினை செயற்கையாகத் தயாரித்து, அதற்கான காப்புரிமையை 1899-ம் ஆண்டு பெற்றது. காய்ச்சலுக்கு மட்டுமன்றி தலைவலி, மூட்டுவலி, ரூமேட்டிக் ஃபீவர், மற்ற உடல் அழற்சிகள் அனைத்திற்குமான மருந்தாக உலகெங்கும் பிரபலமானது ஆஸ்பிரின். 

மேலும் முதலாம் உலகப்போரின் போது, அடிபட்ட வீரர்களுக்கு ஆஸ்பிரின் இன்றியமையாத வலிநிவாரணியாகவும் திகழ்ந்திருக்கிறது. ஆனால், அல்சர், ஆஸ்துமா, தட்டணுக்கள் குறைபாடு, ஹீமோஃபீலியா, இரத்தக்கசிவு, சில வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றில் ஆஸ்பிரின் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியதால், பாரசிட்டமால் போன்ற அடுத்தநிலை மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன.

ஆஸ்பிரின்:

இரத்தத்தில் உள்ள பிராஸ்டகிளான்டின்களைக் கட்டுப்படுத்தி செல்களின் அழற்சியைத் தடுப்பதுடன், இரத்தத்தின் தட்டணுக்கள் உறைதலையும் தடுக்கிறது ஆஸ்பிரின். இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் சிகிச்சையில் ஆஸ்பிரினை பயன்படுத்துவதுடன், இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் அடைப்பு நேராமல் தடுக்கவும் இம்மருந்தை பயன்படுத்தலாம் என்று சர் ஜான் வேன் முக்கியமான ஆராய்ச்சி முடிவைத் தருகிறார். அவரது இந்த பிராஸ்டகிளான்டின்களைத் தடுக்கும் ஆஸ்பிரின் மருந்துகளின் ஆராய்ச்சி முடிவுக்கு 1982-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்று தொடங்கி இன்றளவும் ஆஸ்பிரின் மருந்து இல்லாத நாடு, ஆஸ்பிரின் கிடைக்காத மருந்துக்கடை இல்லை என்றளவிற்கு உயிர்காக்கும் மருந்தாகத் திகழ்கிறது ஆஸ்பிரின். ஆனால், இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளான அல்சர், ஆஸ்துமா, இரத்தக்கசிவு ஆகியவற்றை சுட்டிக்காட்டும் அறிவியல், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

இவ்வளவு மகிமை மிக்க இந்த வில்லோ மரப்பட்டையின் வினைபொருளான ஆஸ்பிரினை, க்ளோபிடாக்ரல், அட்ரவோஸ்டாடின், சார்பிட்ரேட் ஆகிய மருந்துகளுடன் சேர்த்து வழங்கி (மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை) தற்காலிக அடைப்பு நீக்கம் ஏற்பட்டு  உயிர்காக்கப்படும். 

Leave a Comment